பசுமை எரிசக்தி, பசுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நீடித்த வருங்காலத்திற்கான பட்ஜெட்: பிரதமர் மோடி
பட்ஜெட்டில் தொழில் நுட்பம், புதிய பொருளாதாரம் ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்தி உள்ளோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
2023-24-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்து பேசினார். இதில், இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் ஓராண்டுக்கு நீட்டிப்பு, மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுவது ஓராண்டுக்கு நீட்டித்து அறிவிக்கப்பட்டது.
மகிளா சம்மான் என்ற புதிய சேமிப்பு திட்டம் உருவாக்கப்படும். பெண்களின் பெயரில் இரண்டு ஆண்டுகள் சேமிக்கும் வகையில் 7.5% வட்டி வழங்கப்படும். 2 ஆண்டுகளில் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம்.
உள்கட்டமைப்புக்கு முதலீடு, பசுமை எரிசக்தி, இளைஞர் நலன்கள் உள்ளிட்ட 7 முக்கிய அம்சங்களை கொண்டு பட்ஜெட் உருவாக்கப்பட்டு உள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு. கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு. விவசாய கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக உயர்த்தப்படும் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
பட்ஜெட் பற்றி பிரதமர் மோடி கூறும்போது, கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற பெண்களின் வாழ்வை எளிமையாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. மகளிர் சுய உதவி குழுக்கள் அவர்களை இன்னும் மேம்படுத்தும். இல்லத்தரசிகளுக்கு அதிகாரமளிக்கும் வகையில் சிறப்பு சேமிப்பு திட்டங்கள் தொடங்கப்படும்.
பசுமை எரிசக்தி, பசுமை வளர்ச்சி, பசுமை உட்கட்டமைப்பு மற்றும் பசுமை வேலைகள் ஆகியவற்றை மேலும் ஊக்குவிக்கும் வகையில் நீடித்த வருங்காலத்திற்கான பட்ஜெட். நாங்கள் பட்ஜெட்டில் தொழில் நுட்பம், புதிய பொருளாதாரத்தில் கவனம் செலுத்தி உள்ளோம்.
நடுத்தர மக்கள் அதிகாரம் பெறுவதற்கும் மற்றும் அவர்களது வாழ்வை எளிமையாக்குவதற்கும் வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளை எங்களது அரசு எடுத்து உள்ளது. வரி விகிதங்களை குறைத்து நிவாரணம் வழங்கி உள்ளோம் என அவர் தெரிவித்து உள்ளார்.