காங்கிரஸ் கட்சி முற்றிலும் காலாவதி ஆகிவிட்டது - மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தாக்கு
காங்கிரஸ் கட்சி முற்றிலும் காலாவதி ஆகிவிட்டது. இந்திய அரசியலில் தனது இருப்பை இழந்து விட்டது என்று மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
ஐதராபாத்,
மத்திய மந்திரி கிஷன் ரெட்டி, தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார். முன்னதாக, பா.ஜனதா தொண்டர்களிடையே அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சி தனது ஆட்சிக்காலத்தில் ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம் கொடுத்ததாக ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சுப்பாராவ் தனது புத்தகத்தில் கூறியுள்ளார். பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதுபோல் காட்டுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி முற்றிலும் காலாவதி ஆகிவிட்டது. இந்திய அரசியலில் தனது இருப்பை இழந்து விட்டது. திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், பா.ஜனதா சாதி, மதம், இனம் அடிப்படையில் அரசியல் செய்வது இல்லை. ஆட்சி அமைப்பதற்காக அரசியல் செய்வது இல்லை. தேச கட்டுமானத்துக்காக அரசியல் செய்கிறது.
காங்கிரஸ் ஆட்சிகள் ஊழலில் சிக்கித் தவித்தன. ஆனால், வாஜ்பாய், மோடி ஆகியோர் தலைமையிலான பா.ஜனதா ஆட்சிகள் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை. ராமர் கோவில் கட்டுமானம், 370-வது பிரிவு நீக்கம், முத்தலாக் தடை என வாக்குறுதிகளை பா.ஜனதா நிறைவேற்றி உள்ளது. 25 கோடி பேர், வறுமையின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மோடியின் தலையீட்டால், இந்தியர்களை மீட்பதற்காக ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 4 மணி நேரம் நிறுத்தப்பட்டது. இந்தியர்கள் மீட்கப்பட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்தால், இந்திய சிறுபான்மையினர் யாரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.