காங்கிரசில் இருந்து பிரிஜேஸ் காலப்பா விலகல்; ஆம்ஆத்மி கட்சியில் சேர முடிவு


காங்கிரசில் இருந்து பிரிஜேஸ் காலப்பா விலகல்; ஆம்ஆத்மி கட்சியில் சேர முடிவு
x

பிரிஜேஸ் காலப்பா

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக பிரிஜேஸ் காலப்பா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், சோனியா காந்திக்கு கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார். ஆம்ஆத்மி கட்சியில் பிரிஜேஸ் காலப்பா சேர முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

பெங்களூரு:

பதவி கிடைக்காததால் அதிருப்தி

காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்து வந்தவர் பிரிஜேஸ் காலப்பா. இவர், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் ஆவார். கர்நாடகத்தில் காலியாக இருந்த கா்நாடக மேல்-சபை உறுப்பினர் பதவி அல்லது மாநிலங்களவை பதவி கிடைக்கும் என்று பிரிஜேஸ் காலப்பா எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் அவருக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக காங்கிரஸ் தலைவர்கள் மீது பிரிஜேஸ் காலப்பா கடு்ம் அதிருப்தி அடைந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிஜேஸ் காலப்பா திடீரென்று விலகி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் அவர் விலகி இருக்கிறார். இதுதொடா்பாக அவர், காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

காங்கிரசில் இருந்து விலகல்

காங்கிரஸ் கட்சியில் எனக்கு கொடுத்த மரியாதை, பதவிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். உங்களது (சோனியா காந்தி) கர்நாடக அரசின் சட்ட ஆலோசகராகவும் இருந்துள்ளேன். மந்திரி பதவிக்கு நிகராக எனக்கு பதவியும் கிடைத்தது. 1997-ம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளேன். 2014-ம் ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டு வரை காங்கிரஸ் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது கட்சி வளர்ச்சிக்காக உழைத்தேன். சமீபகாலமாக கட்சியில் எனக்கு உரிய மரியாதை, பதவி வழங்கப்படாததால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி கொள்கிறேன்.

இவ்வாறு சோனியா காந்திக்கு எழுதி உள்ள கடிதத்தில் பிரிஜேஸ் காலப்பா கூறியுள்ளார்.

ஆனாலும் அவரை, சமாதானப்படுத்தும் முயற்சியில் மாநில தலைவரான டி.கே.சிவக்குமார் இறங்கி உள்ளார். காங்கிரசில் இருந்து விலகி உள்ள பிரிஜேஸ் காலப்பா ஆம்ஆத்மி கட்சியில் சேர முடிவு செய்திருப்பதாகவும், அதுபற்றி கூடிய விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story