மோசடி கும்பலிடம் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் பணியிடை நீக்கம்
கேரளா மோசடி கும்பலிடம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் தயானந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பெங்களூரு:
கேரளா மோசடி கும்பலிடம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் தயானந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ரூ.26 லட்சம் மோசடி
பெங்களூரு மாரத்தஹள்ளியில் வசித்து வருபவர் சந்தக் ஸ்ரீகாந்த். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ஆன்லைன் மூலமாக வீட்டின் இருந்தபடியே வேலை கொடுப்பதாக கூறி சந்தக் ஸ்ரீகாந்திடம் ரூ.26 லட்சத்தை வாங்கி ஒரு கும்பல் மோசடி செய்திருந்தது. இதுகுறித்து ஒயிட்பீல்டு சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் சந்தக் ஸ்ரீகாந்த் புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது கேரளாவை சேர்ந்த நவுசாத், அகில், நிகில் மற்றும் குடகு மாவட்டம் மடிகேரியை சேர்ந்த ஐசாக் ஆகியோர் தான் சந்தக் ஸ்ரீகாந்திடம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுந்து, கேரளாவை சேர்ந்த மோசடி கும்பலை கைது செய்ய ஒயிட்பீல்டு சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபிரகாஷ், ஏட்டுகளான விஜய்குமார், சந்தேஷ், சிவானி ஆகிய 4 பேரும் கொச்சிக்கு சென்றிருந்தார்கள்.
ரூ.4 லட்சம் லஞ்சம் கேட்டனர்
பின்னர் 3 பேரையும் கைது செய்யாமல் இருக்கவும், இந்த மோசடி வழக்கில் இருந்து அவர்களை விடுவிக்க ரூ.4 லட்சம் லஞ்சம் கொடுக்கும்படி இன்ஸ்பெக்டர் சிவபிரகாஷ் உள்பட 4 பேரும் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த லஞ்ச விவகாரம் குறித்து நவுசாத் கேரள மாநிலம் கள்ளம்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், பெங்களூரு போலீசார் 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியதுடன், அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
விசாரணைக்கு பின்பு அவர்களை போலீசார் விடுவித்திருந்ததுடன், மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீசும் கொடுத்திருந்தனர். மோசடி கும்பலை விடுவிக்க லஞ்சம் கேட்ட விவகாரம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
4 போலீசார் பணியிடை நீக்கம்
இந்த விவகாரத்தை போலீஸ் கமிஷனர் தயானந்த் தீவிரமாக எடுத்து கொண்டு இருந்தார். மேலும் மோசடி கும்பலிடம் லஞ்சம் கேட்டது குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி ஒயிட்பீல்டு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கிரீசுக்கு அவர் உத்தரவிட்டு இருந்தார். அந்த விசாரணையில், கேரள கும்பலிடம் 4 போலீசாரும் லஞ்சம் கேட்டது, இந்த விவகாரத்தில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதும் உறுதியானது.
இதையடுத்து, ஒயிட்பீல்டு சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபிரகாஷ், ஏட்டுகள் விஜய்குமார், சந்தேஷ், சிவானி ஆகிய 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து நேற்று போலீஸ் கமிஷனர் தயானந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அவர்கள் 4 பேர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.