ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது


ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது
x

புகார் கொடுக்க வந்தவரை மிரட்டி ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை லோக் அயுக்தா போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

கோலார் தங்கவயல்:

புகார் கொடுக்க வந்தவரை மிரட்டி ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை லோக் அயுக்தா போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

லஞ்சம் கேட்டார்

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை உரிகம்பேட்டை பிஷ் லைன் பகுதியை சேர்ந்தவர் சையத் யூசூப். இவருக்கும், இவரது உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சையத் யூசூப் ராபர்ட்சன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பரிதா பானு புகார் கொடுக்க வந்த சையத் யூசூப்பை மிரட்டி உன் மீது தான் தவறு உள்ளது.

எனவே, உன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டி உள்ளது. வழக்கு பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. டிசம்பர் 12-ந் தேதி சையத் யூசூப் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பரிதா பானுவிடம் ரூ.1,500-ஐ கொடுத்துள்ளார்.

கைது

இது போதாது, வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கொடுக்கவேண்டும் என்று பரிதா பானு கேட்டுள்ளார். முதல் கட்டமாக ரூ.5 ஆயிரத்தை சையத் யூசூப், பரிதா பானுவிடம் கொடுத்துள்ளார். தொடர்ந்து சையத் யூசூப்பிடம் லஞ்ச பணத்தை கொடுக்கும்படி பரிதா பானு செல்போனில் தொடர்புகொண்டு கேட்டுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சையத் யூசூப் இதுகுறித்து கோலாரில் உள்ள லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த லோக்அயுத்தா போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்து, போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பரிதா பானுவிடம் கொடுக்கமாறு கூறினர். அதன்பேரில் சையத் யூசூப்பும், உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரிதா பானுவை சந்தித்து லஞ்சப்பணத்தை கொடுத்தார். பரிதா பானுவும் லஞ்சப்பணத்தை வாங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லோக்அயுக்தா போலீசார், பரிதா பானுவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Next Story