உத்தரகாண்டில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 12 பேர் பலி


உத்தரகாண்டில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 12 பேர் பலி
x

உத்தரகாண்டில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.

ருத்ரபிரயாக்,

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக சுமார் 23 பயணிகளுடன் வேன் ஒன்று காசியாபாத்தில் இருந்து சோப்தா துங்நாட் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் அலகனந்தா நதிக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த மாவட்ட கலெக்டருக்கு உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி புஸ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ருத்ரபிரயாக் மாவட்டத்தில் வேன் விபத்துக்குள்ளான மிகவும் வேதனையான செய்தி கிடைத்தது. உள்ளூர் நிர்வாகம் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், இந்த துயரத்தைத் தாங்கும் சக்தியை அவர்களை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுக்கவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பாபா கேதாரைப் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story