விஜயேந்திராவுக்கு முக்கியத்துவம் அளித்த அமித்ஷா
எடியூரப்பா வீட்டில் காலை சிற்றுண்டி சாப்பிட்ட அமித்ஷா, விஜயேந்திராவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். முதலில் விஜயேந்திராவிடம் இருந்து பூங்கொத்தை வாங்கி மகிழ்ந்ததுடன், அவர் பரிமாறிய உணவை ருசித்து சாப்பிட்டார்.
பெங்களூரு:
எடியூரப்பா வீட்டில் காலை சிற்றுண்டி சாப்பிட்ட அமித்ஷா, விஜயேந்திராவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். முதலில் விஜயேந்திராவிடம் இருந்து பூங்கொத்தை வாங்கி மகிழ்ந்ததுடன், அவர் பரிமாறிய உணவை ருசித்து சாப்பிட்டார்.
எடியூரப்பா வீட்டில் சிற்றுண்டி
பெங்களூருவில் நடந்த போதைப்பொருள் கடத்தல் தடுப்பு தொடர்பான தென்மண்டல மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்றார்.
இதற்காக அமித்ஷா நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பெங்களூருவுக்கு வந்தார். அவருக்கு முதல்-மந்திரி பசவாஜ்பொம்மை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இரவில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்த அமித்ஷா நேற்று காலை பெங்களூரு குமரகிருபா சாலையில் உள்ள முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் காவேரி இல்ல வீட்டுக்கு சென்றார்.
விஜயேந்திரா முதுகில் தட்டிக்கொடுத்தார்
அவரை வரவேற்க எடியூரப்பா தனது மகன் விஜயேந்திரா, மந்திரி கோவிந்த் கார்ஜோள் ஆகியோருடன் நின்றிருந்தார். அமித்ஷா காரை விட்டு இறங்கியதும், அவருக்கு பூங்கொத்து கொடுக்க எடியூரப்பா முயன்றார். அப்போது அமித்ஷா, அந்த பூங்கொத்தை விஜயேந்திராவிடம் கொடுக்கும்படி கூறினார்.
முதலில் புரியாமல் குழம்பிய எடியூரப்பா சிறிது நேரத்தில் பூங்கொத்தை விஜயேந்திராவிடம் பூங்கொத்தை கொடுத்தார். அதை அவர், அமித்ஷாவிடம் வழங்கினார். விஜயேந்திராவிடம் இருந்து பூங்கொத்தை பெற்ற அமித்ஷா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் அவரது முதுகில் தட்டிக்கொடுத்து அன்பை வெளிப்படுத்தினார்.
அமித்ஷாவுக்கு பரிமாறிய விஜயேந்திரா
இதையடுத்து எடியூரப்பா, அமித்ஷாவுக்கு பூங்கொத்து கொடுத்தார். தொடர்ந்து எடியூரப்பாவும், விஜயேந்திராவும் அமித்ஷாவை வீட்டுக்குள் அழைத்து சென்றனர். பின்னர் வீட்டுக்குள் சென்ற அமித்ஷாவுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. உப்புமா, இட்லி, பொங்கல், தோசை பரிமாறப்பட்டது. அவற்றை விஜயேந்திராவே அமித்ஷாவுக்கு பரிமாறினார்.
அமித்ஷாவுடன் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை, பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங், மாநில பா.ஜனதா தலைவர் நளீன்குமார் கட்டீல் ஆகியோரும் காலை சிற்றுண்டி சாப்பிட்டனர்.
தேர்தல் குறித்து ஆலோசனை
இதைத்தொடர்ந்து அமித்ஷாவுக்கு விஜயேந்திரா நினைவு பரிசுகளை வழங்கினார். முன்னதாக அமித்ஷா, கர்நாடக சட்டசபை தேர்தல் தொடர்பாகவும், வேட்பாளர்கள் தேர்வு குறித்தும், மீண்டும் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைப்பது தொடர்பான வியூகம் குறித்தும் எடியூரப்பா, பசவராஜ்பொம்மை, அருண்சிங், நளின்குமார் கட்டீல் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அங்கிருந்து அமித்ஷா காரில் ஏறி புறப்பட்டு சென்றார். மாநிலத்தில் பெரும்பான்மை சமுதாயமான லிங்காயத் சமுதாயத்தின் அசைக்க முடியாத தலைவராக உள்ள எடியூரப்பாவை வயது காரணம் காட்டி மேலிடம் முதல்-மந்திரி பதவியை விலக வைத்தது. இதற்கு லிங்காயத் சமுதாய மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்தது.
உடனே எடியூரப்பாவுக்கு பா.ஜனதா மேலிடம் உயர்நிலை குழு உறுப்பினர் மற்றும் தேர்தல் குழு உறுப்பினர் பதவியை வழங்கியுள்ளது. தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கிய எடியூரப்பா ,தனது அரசியல் வாரிசாக விஜயேந்திராவை முன்னிலைப்படுத்தி வருகிறார். இதற்கு அக்கட்சியினர் சில எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அத்துடன் விஜயேந்திரா மீது மேலிடத்திடமும் புகார் அளித்திருந்தனர்.
பரபரப்பு
இந்த நிலையில் எடியூரப்பா வீட்டுக்கு வந்த அமித்ஷா விஜயேந்திராவுக்கு முக்கியத்துவம் அளித்த சம்பவம், கட்சியில் விஜயேந்திராவுக்கு மேலிடம் ஆதரவு இருப்பதை உணர்த்துவதாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இது பா.ஜனதாவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.