பிரதமர் மோடி பாதுகாப்பில் விதிமீறல்; பஞ்சாப் அரசிடம் விரிவான விளக்க அறிக்கை கேட்ட மத்திய அரசு
பிரதமர் மோடி பாதுகாப்பில் ஏற்பட்ட விதிமீறல் பற்றி பஞ்சாப் அரசிடம் மத்திய அரசு விரிவான விளக்க அறிக்கை கேட்டு உள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் மோடி பஞ்சாப்பில் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அவரது பாதுகாப்பில் விதிமீறல் ஏற்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபற்றி விசாரணை குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. அதன் அறிக்கை கடந்த 6 மாதங்களுக்கு முன் சமர்ப்பிக்கப்பட்டது.
அதில், பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதற்கு அப்போது பஞ்சாப் முதன்மை செயலாளராக இருந்த அனிருத் திவாரி, காவல் தலைவர் சட்டோபாத்யாய் மற்றும் பிற உயரதிகாரிகள் ஆகியோரை குற்றவாளிகளாக சேர்த்திருந்தது.
இந்த பாதுகாப்பு மீறல் ஏற்பட்டதும், மத்திய உள்துறை அமைச்சகம் 3 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. இதன்படி, பஞ்சாப் டி.ஜி.பி. சட்டோபாத்யாய், பஞ்சாப் ஏ.டி.ஜி.பி. மற்றும் பாட்டியாலா ஐ.ஜி.பி. மற்றும் பெரோஸ்பூர் டி.ஐ.ஜி. உள்பட பஞ்சாப்பின் 12-க்கும் மேற்பட்ட காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அவர்களே பிரதமர் மோடி பாதுகாப்பில் ஏற்பட்ட விதிமீறலுக்கு பொறுப்பானவர்கள் என 3 பேர் கமிட்டி தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, அந்த அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி விரிவான விளக்க அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி பஞ்சாப் அரசிடம் மத்திய அரசு கேட்டு கொண்டு உள்ளது.
இதுபற்றி மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, பஞ்சாப் முதன்மை செயலாளர் விஜய் குமார் ஜன்ஜுவாவிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும்படி கூறியுள்ளார் என கூறப்படுகிறது. இதுபற்றி கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டு உள்ளது.