திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருமலை,
கொரோனா தொற்று பரவலால் 2 ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா வாகன சேவை நான்கு மாட வீதிகளில் நடத்தவில்லை. கோவில் உள்ளேயே பக்தர்களுக்கு அனுமதியின்றி வாகன சேவை நடத்தப்பட்டது. இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி 4 மாடவீதிகளில் வாகன சேவை நடக்கிறது.
முதல் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.45 மணியில் இருந்து மாலை 6.15 மணிவரை மீன லக்னத்தில் பிரம்மோற்சவ விழா கருட கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பின்னர் பெரிய சேஷ வாகனத்தில் பூதேவி, ஸ்ரீதேவி சமேதராய் ஏழுமலையான் மாட வீதிகளில் உலா வருகிறார்.
பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் மற்றும் கோவில் வெளிப்புறங்களில் பல்வேறு வண்ண மலர்கள், அரியவகையான பழ வகைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மேலும் வண்ண மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால் திருமலை முழுவதும் மின்னொளியில் ஜொலிக்கிறது.
2-வது நாள் நாளை காலை சின்ன சேஷ வாகனத்திலும், மாலை அம்ச வாகனத்திலும், 3-வது நாள் காலை சிம்ம வாகனத்திலும், மாலை முத்து பல்லக்கு வாகனத்திலும், 4-வது நாள் கல்ப விருட்ச வாகனத்திலும், மாலை சர்வ பூபால வாகனத்திலும், 5-வது நாள் மோகினி வாகனத்திலும், மாலை தங்க கருட வாகன ஊர்வலம் நடைபெறுகிறது.
6-வது நாள் அனுமந்த வாகனமும், மாலை தங்கத்தேர் வாகன சேவை நடைபெறுகிறது. 7-வது நாள் காலை சூரிய பிரபை வாகனமும், மாலை சந்திர பிரபை வாகன வீதி உலா நடைபெறுகிறது. 8-வது நாள் காலை தேர் வீதி உலாவும், மாலை குதிரை வாகன ஊர்வலம் நடைபெறுகிறது.
பிரம்ேமாற்சவ விழா நிறைவு நாளான 5-ந்தேதி அதிகாலை 3 மணியில் இருந்து காலை 6 மணிவரை பல்லக்கு வாகன வீதிஉலா, காலை 6 மணியில் இருந்து காலை 9 மணிவரை தெப்பக்குளத்தில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது. இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை கொடியிறக்கம் நடக்கிறது. இத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 4 மாட வீதியில் சாமி வீதி உலாவை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவைக்கான லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரம்மோற்சவ விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரம்மோற்சவத்தின்போது திருட்டுச்சம்பவம் நடக்காமல் இருக்கவும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க சிறப்புப் படைகளுடன் தேவஸ்தான பறக்கும் படை ஊழியர்களும், 460 சிறப்பு பாதுகாப்புப்படை வீரர்கள் உள்பட 5 ஆயிரம் ேபர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கருட சேவைக்காக சிறப்பாக 1,256 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.