பிரம்மாவர் தாலுகா அரசு பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி மாணவர்கள் போராட்டம்
பிரம்மாவர் தாலுகாவில் உள்ள அரசு பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மங்களூரு-
பிரம்மாவர் தாலுகாவில் உள்ள அரசு பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அதிகாரிகளுடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 5 பேர் காயம் அடைந்தனர்.
அரசு பள்ளி
உடுப்பி மாவட்டம் பிரம்மாவர் தாலுகா கோடிபைங்கரே கிராமத்தில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு 67 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் 4 ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசிரியர் ஒருவர் பணிஇடமாறுதலாகி சென்றார். தற்போது 3 ஆசிரியர்கள் மட்டுமே பாடம் கற்பித்து வருகிறார்கள். இதனால் அரசு பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை ஆசிரியர்களை நியமிக்கவில்லை. இதனால் மாணவர்கள் கல்வி பயில்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் கோடிபைங்கரேயில் உள்ள அரசு பள்ளி முன்பு மாணவர்கள் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்கள் பற்றாக்குறை
அப்போது அவர்கள் கூறுகையில், அரசு பள்ளியில் 67 மாணவர்கள் படித்து வருகிறார்கள். ஆனால் பாடம் கற்பிக்க 3 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகிறது. மேலும் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. இப்படியே சென்றால் பள்ளியை மூட வேண்டியதுதான். இதற்கு கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்கள், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
5 பேர் காயம்
ஆனால் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அதிகாரிகளுடன் ஏற்பட்ட தள்ளு-முள்ளுவால் மாணவர்கள் உள்பட 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.