பி.பி.எல். குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று பரிசீலனை; மந்திரி கே.எச்.முனியப்பா பேட்டி


பி.பி.எல். குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று பரிசீலனை; மந்திரி கே.எச்.முனியப்பா பேட்டி
x

பி.பி.எல். குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று பரிசீலனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி கே.எச்.முனியப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பி.பி.எல். குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று பரிசீலனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி கே.எச்.முனியப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு விதானசவுதாவில் நேற்று மந்திரி கே.எச்.முனியப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

அன்னபாக்ய திட்டம்

அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் 5 கிலோ அரிசிக்கு பதிலாக ரூ.170 கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.566 கோடியை சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்குகளுக்கே செலுத்தி உள்ளோம். சிவமொக்கா, உடுப்பி, சிக்பள்ளாப்பூர், விஜயநகர் மாவட்டங்களில் உள்ள பி.பி.எல். குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே இன்னும் பணம் வழங்க வேண்டிய உள்ளது. மற்ற அனைத்து மாவட்டங்களில் வசிப்போருக்கு இந்த மாதம் வழங்க வேண்டிய பணம் வழங்கப்பட்டுள்ளது.

அரிசிக்கு பதில் பணம் வழங்குவது நீண்ட நாட்கள் தொடராது. அந்த திட்டத்திற்காக 2.40 லட்சம் டன் அரிசி தேவையாகும். இதற்கான டெண்டர் பணிகள் தொடங்கி உள்ளது. அதனால் கூடிய விரைவில் பி.பி.எல். குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசியே வழங்கப்படும்.

வீடு, வீடாக சென்று பரிசீலனை

பி.பி.எல். மற்றும் ஏ.பி.எல். குடும்ப அட்டை வைத்திருப்பவர்களின் வீடுகளுக்கு சென்று பரிசீலனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பி.பி.எல். அட்டைதாரர்கள் 3 மாதத்திற்கும் மேலாக அரிசி வாங்காமல் இருந்து வருகிறார்கள். அதற்காக பி.பி.எல். அட்டை ரத்து செய்யப்படாது. பி.பி.எல். அட்டைகள் இருப்பவர்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலமாக ரூ.5 லட்சம் வரை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற முடியும்.

இதற்காகவும் அவர்கள் பி.பி.எல். குடும்ப அட்டைகளை வாங்கி வைத்திருக்கலாம். என்றாலும், அரசின் சலுகைகள் சம்பந்தப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டும். அதனால் பி.பி.எல்., ஏ.பி.எல். அட்டை வைத்திருப்பவர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க வீடு, வீடாக சென்று பரிசீலனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசீலனையின் போது அட்டைதாரர்கள் பற்றிய தகவல்கள் மட்டும் சேகரிக்கப்படும்.

இவ்வாறுஅவர் கூறினார்.


Next Story