கொள்ளேகாலில் சிகிச்சை பலனின்றி சிறுவன் பலி; தனியார் ஆஸ்பத்திரி முற்றுகை
கொள்ளேகால் டவுனில் சிகிச்சை பலனின்றி சிறுவன் பலியான நிலையில் தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு சிறுவனின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொள்ளேகால்:-
12 வயது சிறுவன்
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் டவுன் பகுதியில் வசித்து வருபவர் கவுரம்மா. இவரது மகன் அம்ருதா. 12 வயதான இந்த சிறுவனுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மகனை கவுரப்பா கொள்ளேகால் டவுனில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுவன் அம்ருதா நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தான். இதுபற்றி அறிந்த கவுரம்மாவும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
பேச்சுவார்த்தை
அவர்கள் சிறுவன் அம்ருதாவின் சாவுக்கு டாக்டர்களின் தவறான சிகிச்சை மற்றும் அலட்சியமே காரணம் என்று கூறி ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் சிறுவனின் உடலை ஆஸ்பத்திரியின் முன்பு வைத்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சிறுவனின் தாய் கவுரம்மா கடந்த 2 வருடத்திற்கு முன்பு கொரோனாவுக்கு தனது கணவர் பலியாகி விட்டதாகவும், தற்போது மகனும் இறந்து விட்டதால் தான் ஆதரவற்று இருப்பதாகவும் கண்ணீர் மல்க கூறினார்.
போலீசார் உறுதி
அதையடுத்து இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாகவும், தொகுதி எம்.எல்.ஏ.விடம் பேசி கவுரம்மாவுக்கு நிவாரணம் பெற்றுத்தர உறுதுணையாக இருப்பதாகவும் போலீசார் கூறினர். அதை ஏற்றுக்கொண்ட கவுரம்மாவும், அவரது குடும்பத்தினரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அம்ருதாவின் உடலுடன் கலைந்து சென்றனர்.