உத்தர பிரதேசத்தில் தக்காளியை பாதுகாக்க பவுன்சர்களை நியமித்த விவகாரம் - 3 பேர் மீது வழக்குப்பதிவு


உத்தர பிரதேசத்தில் தக்காளியை பாதுகாக்க பவுன்சர்களை நியமித்த விவகாரம் - 3 பேர் மீது வழக்குப்பதிவு
x

தக்காளியை பாதுகாக்க பவுன்சர்களை நியமித்த விவகாரத்தை அவதூறு வழக்காக உத்தர பிரதேச மாநில போலீசார் பதிவு செய்தனர்.

லக்னோ,

நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. வரத்து குறைவு, விளைச்சல் பாதிப்பு மற்றும் மழை காரணமாக விலை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே காய்கறி கடைகளிலும், வயல் வெளிகளிலும் தக்காளிகள் திருடப்படும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்துவருகிறது.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சி பிரமுகர் அஜய் என்பவர், தனக்கு சொந்தமான காய்கறி கடையில் தக்காளியை பாதுகாக்க கடையின் முன்பு இரு பவுன்சர்களை நியமித்திருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.

அந்த வீடியோவில், தனது கடைக்கு வரும் மக்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும், இதனால் தக்காளிகளை பாதுகாக்க பவுன்சர்களை நியமித்துள்ளதாகவும் அஜய் விளக்கமளித்தார். இந்த வீடியோவை சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "நியாயப்படி பா.ஜ.க. தக்காளிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தக்காளியை பாதுகாக்க பவுன்சர்களை நியமித்த விவகாரத்தை அவதூறு வழக்காக பதிவு செய்த உத்தர பிரதேச மாநில போலீசார், அஜய் மற்றும் அவரது கடையை நிர்வகித்து வந்த தந்தை, மகன் என மொத்தம் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து அந்த கடையில் இருந்த தந்தை மற்றும் மகன் கைது செய்யப்பட்ட நிலையில், அஜய் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153, 291 மற்றும் 505-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




Next Story