வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு உச்சவரம்பு ஏன்? பெட்ரோலியத்துறை இணை மந்திரி விளக்கம்
ஒவ்வொருவருக்கும் வீ்ட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையில் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது ஏன் என்பதற்கு மாநிலங்களவையில் பெட்ரோலியத்துறை இணை மந்திரி விளக்கம் அளித்தார்.
திடீர் சோதனை
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பெட்ரோலியத்துறை இணை மந்திரி ராமேஸ்வர் டெலி கூறியதாவது:-
ஒரு வீட்டு உபயோக சமையல் கியாஸ் இணைப்புக்கு ஒரு நிதிஆண்டில், 14.2 கிலோ எடை கொண்ட 15 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. வணிக பயன்பாட்டுக்காக வீட்டு உபயோக சிலிண்டர்கள் திருப்பி விடப்படுவதை தடுப்பதற்குத்தான் இந்த உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதை தடுக்க வினியோக நிறுவனங்களிலும், வாடிக்கையாளர் வீடுகளிலும், வினியோக வாகனங்களிலும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திடீர் திடீரென சோதனை நடத்தி வருகின்றன.
ஜி.எஸ்.டி. எவ்வளவு?
வாடிக்கையாளருக்கு 15 சிலிண்டர்களுக்கு மேல் தேவைப்படும்போது, சமையல் கியாஸ் வினியோகஸ்தரிடம் அதற்கான நியாயமான காரணத்தை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம். வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் மீது 18 சதவீத ஜி.எஸ்.டி.யும், வீட்டு உபயோக சிலிண்டர்கள் மீது 5 சதவீத ஜி.எஸ்.டி.யும் விதிக்கப்படுகிறது.
நாட்டில் போதுமான சமையல் கியாஸ் கிடைக்கிறது. எண்ணெய் நிறுவனங்கள், கியாஸ் தேவையை பூர்த்திசெய்ய கியாசை இறக்குமதி செய்கிறன்றன. நமது தேவையில் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட கியாஸ், இறக்குமதி செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முப்படைகளில் காலியிடங்கள்
மாநிலங்களவை கேள்வி நேரத்தில் ராணுவ இணை மந்திரி அஜய்பட் கூறியதாவது:-
முப்படைகளில் மொத்தம் 1 லட்சத்து 55 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றில், அதிகபட்சமாக, ராணுவத்தில் 1 லட்சத்து 36 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. விமானப்படையில் 7 ஆயிரத்து 31 காலி பணியிடங்களும், கடற்படையில் 12 ஆயிரத்து 428 காலியிடங்களும் உள்ளன.
காலியிடங்களை நிரப்ப பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. படைகளில் சேருமாறு இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.