விதான சவுதாவுக்கு வெடிகுண்டு மிரட்டல்; சாப்ட்வேர் என்ஜினீயர் கைது
காதல் தோல்வியால் மனமுடைந்த சாப்ட்வேர் என்ஜினீயர் என்ஜினீயர் விதான சவுதா கட்டிடத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு:
விதான சவுதா
கர்நாடகத்தின் அதிகார மையமாக பெங்களூருவின் விதான சவுதா (சட்டசபை) உள்ளது. இந்த கட்டிடத்தை சுற்றி எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். இந்த நிலையில் கர்நாடக அரசின் முதன்மை செயலாளரை மர்மநபர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது விதான சவுதா கட்டிடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், அந்த வெடிகுண்டு சிறிது நேரத்தில் வெடித்துவிடும் என்றும் எச்சரித்தார். அவர் 3 முறை தொடர்ந்து போன் செய்து வெடிகுண்டு இருப்பதாக மிரட்டிவிட்டு, தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அலுவலக அதிகாரிகள், உடனடியாக விதான சவுதா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். விதான சவுதா கட்டிடத்தின் உட்பகுதி, வெளிப்பகுதிகளில் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். சோதனையின் போது வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.
இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மர்மநபர் தொடர்பு கொண்ட செல்போன் எண்ணை வைத்து போலீசார் துப்புதுலக்கினர்.
காதல் தோல்வி
அப்போது ஹெப்பகோடி பகுதியை சேர்ந்த பிரஷாந்த் (வயது 46) என்பவர் விதானசவுதாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் 2 பெண்களை காதலித்து வந்ததாகவும், ஆனால் அவர்கள் இருவரும் காதலை முறித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டு உள்ளார்.
இதற்கிடையே அவரது குடும்பத்தினர், அவரை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இதனால் மனஉளைச்சல் ஏற்பட்ட பிரசாந்த், சமூகவலைத்தளத்தில் இருந்து கர்நாடக முதன்மை செயலாளர் அலுவலக தொலைபேசி எண்ணை எடுத்துள்ளார். பின்னர் அந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரால் பெங்களூருவில் பரபரப்பு ஏற்படுத்தியது.