அம்பானி இல்ல திருமண விழாவுக்கு வெடிகுண்டு மிரட்டல்; நபர் கைது


அம்பானி இல்ல திருமண விழாவுக்கு வெடிகுண்டு மிரட்டல்; நபர் கைது
x

குஜராத்தின் வதோதரா நகரில் வீட்டில் இருந்த வைரல் ஷா என்ற நபரை மும்பை போலீசின் குற்ற பிரிவு அதிகாரிகள் இன்று காலை கைது செய்தனர்.

வதோதரா,

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இடையேயான திருமணம் கடந்த 12-ந்தேதி மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து, திருமண நிகழ்ச்சி 3 நாட்களாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், 2-வது நாள் சுப ஆசீர்வாத் நிகழ்ச்சி நடந்தது. திருமண கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக 3-வது நாள் மங்கள உத்சவ நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் சர்வதேச அளவிலான முக்கிய பிரமுகர்கள் என உள்ளூர் திரை பிரபலம் முதல் உலக பிரபலம் வரை பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஷாருக் கான், கவுரி கான், சல்மான் கான், ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் தங்களுடைய குடும்பத்தினருடன் இந்நிகழ்ச்சிக்கு வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கிரிக்கெட் பிரபலம் தோனி, மல்யுத்த வீரர் ஜான் சீனா ஆகியோரின் நடனமும், பிரபல பாடகர்களின் இசை கச்சேரியும் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், அம்பானி இல்ல திருமண நிகழ்ச்சியின்போது, வெடிகுண்டு வெடிக்கும் என்று சமூக ஊடகம் வழியே நபர் ஒருவர் மிரட்டல் விடுத்தது பரபரப்பு ஏற்படுத்தியது. இதுபற்றி மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், குஜராத்தின் வதோதரா பகுதியை சேர்ந்த வைரல் ஷா என்பவர் மிரட்டல் விடுத்த நபர் என தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் பற்றி காவல் அதிகாரி ஒருவர் கூறும்போது, குஜராத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் இருந்த ஷாவை மும்பை போலீசின் குற்ற பிரிவு அதிகாரிகள் இன்று காலை கைது செய்தனர். அந்த பதிவில், அம்பானி இல்ல திருமணத்தில் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததும், உலகத்தின் பாதி பகுதி நாளை தலைகீழாக போகிறது என அந்நபர் தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில், வதோதராவில் அந்நபர் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து மும்பைக்கு அழைத்து வந்துள்ளனர் என கூறியுள்ளார்.


Next Story