பயஸ்வினி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி பிணமாக மீட்பு
பயஸ்வினி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளியை தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டனர்.
மங்களூரு-
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்தவர் நாராயணன். கூலி தொழிலாளி. இவர் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா அலமட்டி பகுதியில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பயஸ்வினி ஆற்றின் அருகே நாராயணன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கனமழை காரணமாக ஆற்றில் ெவள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அந்த சமயத்தில், எதிர்பாராதவிதமாக பயஸ்வினி ஆற்றுக்குள் நாராயணன் தவறி விழுந்தார். இதனால் அவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து அவரை மீட்க முயன்றனர். ஆனாலும் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அவரை காப்பாற்ற முடியவில்லை.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சுள்ளியா போலீசாரும், தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 3 நாட்களாக அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், 4-வது நாளான நேற்று பயஸ்வினி ஆற்றில் இருந்து நாராயணன் பிணமாக மீட்கப்பட்டார். அவர் அடித்து செல்லப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உடல் கிடந்தது. அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து சுள்ளியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.