மரத்தை வெட்டியதால் ரத்தம் வடிந்ததாக பரபரப்பு
பெங்களூரு மாகடி ரோடு பகுதியில் மரத்தை வெட்டியபோது ரத்தம் வடிந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
ராஜாஜிநகர்:
பெங்களூரு ராஜாஜிநகர் அருகே மாகடி ரோட்டில் உள்ள ஜி.டி.மால் அருகே ஒரு மரம் உள்ளது. இந்த மரத்தின் கிளைகள் பரந்து விரிந்து இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்தது. இதனால் மரத்தின் கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மரத்தில் இருந்து சிவப்பு நிறத்தில் தண்ணீர் போன்று திரவம் வடிந்தது. இந்த நிலையில் மரத்தில் இருந்து ரத்தம் வடிவதாக அப்பகுதி மக்களிடம் தகவல் பரவியது. இதனால் அந்த மரத்தின் அருகே வந்த மக்கள் இது கடவுளின் மரம் என்றும், மரத்தை வெட்டியதால் ரத்தம் வடிவதாகவும், இது கடவுளின் அதிசயம் என்று கூறி அந்த மரத்தை தொட்டு வணங்கி சென்றனர். ஆனால் அது ரத்தம் இல்லை என்றும், சிவப்பு நிற திரவம் என்பதும் பின்னர் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.