கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றி உறுதி
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றி உறுதியாகிவிட்டது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
துமகூரு:-
முன்னேற்ற முடியாது
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதாவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் துமகூருவில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றி உறுதியாகிவிட்டது. நான் 'ஜெய் பஜரங்பலி' என்று கூறினால் காங்கிரஸ் பயப்படுகிறது. காங்கிரஸ், அடிமைகளுக்கு ஆதரவாக உள்ளது. காங்கிரஸ் கட்சியால் கர்நாடகத்தை முன்னேற்ற முடியாது. காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியின் ஆட்டம் என்ன என்பது மக்களுக்கு நன்றாக புரிந்துள்ளது.
வாக்களிக்க வேண்டும்
காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளுக்கு நீங்கள் வாக்களித்தால், அது நிலையற்ற ஆட்சிக்கு வழிவகுக்கும். அதனால் இந்த முறை பா.ஜனதா தலைமையில் தனிப்பெரும்பான்மையுடன் கூடிய அரசு அமைய நீங்கள் வாக்களிக்க வேண்டும். நாட்டில் கடந்த 9 ஆண்டுகளில் நான் ஏராளமான வளர்ச்சி பணிகளை செய்துள்ளேன். காங்கிரஸ் ஆட்சியில் 70 ஆண்டுகளில் செய்யாத பணிகளை நாங்கள் செய்துள்ளோம்.
மத்தியில் பா.ஜனதா ஆட்சியின் முயற்சியால் இன்று நாட்டில் 9 கோடி பெண்கள் மகளிர் சுயஉதவி குழுக்களில் இணைந்துள்ளனர். விவசாயிகள் உற்பத்தி சங்கங்களால் விவசாயிகளுக்கு அனுகூலம் ஏற்பட்டுள்ளது. குறைந்த விலையில் விவசாயிகளுக்கு உரம் வழங்குகிறோம். 4 கோடி வீடுகளை கட்டி ஏழை மக்களுக்கு வழங்கியுள்ளோம். இதில் 3 கோடி வீடுகள் கிராமங்களில் கட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு மோடி பேசினார்.
பா.ஜனதா தொண்டர்கள்
கன்னடத்தில் உரையை தொடங்கிய மோடி பிறகு இந்தியில் பேசினார். தனது உரையின் தொடக்கத்தில் குவெம்பு, மறைந்த சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமி உள்ளிட்டோரை நினைவு கூர்ந்தார். பொதுக்கூட்ட மேடைக்கு வருவதற்கு முன்பு ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து மேடை வரை காரின் பக்கவாட்டில் கதவை திறந்து நின்றபடி சாலையோரம் குவிந்திருந்த பா.ஜனதா தொண்டர்களை பார்த்து கைகளை அசைத்தபடி வந்தார். அவரது காரின் மீது பூக்களை தூவி தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
இந்த பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு மோடி ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து கார் மூலம் கவர்னர் மாளிகைக்கு வந்தார். அங்கு நேற்று இரவு தங்கிய அவர் இன்று (சனிக்கிழமை) பெங்களூருவில் ஊர்வலம் நடத்தி ஆதரவு திரட்டுகிறார்.