பா.ஜ.க. 15 தொகுதிகளில் வெற்றி பெறுமா? என பார்ப்போம்: பூபேஷ் பாகெல்
பா.ஜ.க. தொண்டர்களின் மனவுறுதியை ஊக்குவிப்பதற்காக இவற்றையெல்லாம் ரமன் சிங் கூறி வருகிறார் என்று பாகெல் கூறியுள்ளார்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்காரில் 2 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. முதல்கட்ட தேர்தலில் 20 தொகுதிகளுக்கும், 2-வது கட்ட தேர்தலில் 70 தொகுதிகளுக்கும் என மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் வாக்கு பதிவு நடந்து முடிந்துள்ளது.
முதல்கட்ட தேர்தலையொட்டி பா.ஜ.க. முன்னாள் முதல்-மந்திரி ரமன் சிங் பேசும்போது, 20 தொகுதிகளில் குறைந்தது 14 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறினார். 2 கட்ட தேர்தல் முடிந்த பின்னர் அவர் கூறும்போது, சத்தீஷ்காரில் 55 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.
இதுபற்றி சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகெல் செய்தியாளர்களிடம் கூறும்போது, ரமன் சிங்கின் புகழ் உச்சத்தில் இருந்தபோது, அவரால் 52 தொகுதிகளை விட கூடுதலான தொகுதிகளில் வெற்றியை பெற முடியவில்லை.
அவர்கள் எப்படி 55 இடங்களில் வெற்றி பெற முடியும் என எதிர்பார்க்கிறார்கள்? அவருடைய தொண்டர்களின் மனவுறுதியை ஊக்குவிப்பதற்காக இவற்றையெல்லாம் அவர் கூறி வருகிறார்.
தேர்தல் முடிவுகள் வரும்போது, 15 தொகுதிகளை விட கூடுதலாக அவர்கள் வெற்றி பெறுவார்களா? இல்லையா? என எல்லோருக்கும் தெரிய வரும் என்று கூறினார்.