நாட்டின் வரலாற்றை மாற்ற பா.ஜ.க. விரும்புகிறது; அதற்காகவே... நிதிஷ் குமார் பேட்டி
நாட்டின் வரலாற்றை மாற்ற பா.ஜ.க. விரும்புகிறது என்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் அளித்த பேட்டியின்போது கூறியுள்ளார்.
பாட்னா,
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வை எதிர்கொள்ளும் வகையில், பல்வேறு பிராந்திய கட்சி தலைவர்களை பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் அடுத்தடுத்து நேரில் சந்தித்து பேசி வருகிறார்.
இதற்காக, கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி மற்றும் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சூழலில், மேற்கு வங்காளத்தின் ஹவுரா நகரில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை, நிதிஷ் குமார் மற்றும் பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஏப்ரல் இறுதியில் (24-ந்தேதி) நேரில் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பு பற்றி அவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஒன்றாக அமர்ந்து பதிலளித்தனர். அதில், மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடையே பேசும்போது, நான் நிதிஷ் குமாரிடம் ஒரேயொரு வேண்டுகோள் வைத்தேன். பீகாரில் இருந்து ஜெயபிரகாஷ்ஜியின் இயக்கம் தொடங்கியது.
பீகாரில் நாம் அனைத்து கட்சி கூட்டம் நடத்தினால், அடுத்து செல்வது பற்றி முடிவு செய்யலாம் என கூறினேன். முதலில், நாம் ஒன்றாக இருக்கிறோம் என்ற செய்தியை மக்களுக்கு தரவேண்டும். எனக்கு எந்தவித மறுப்பும் இல்லையென்று முன்பே கூட நான் தெரிவித்து இருக்கிறேன்.
பா.ஜ.க. பூஜ்யம் ஆக வேண்டும் என்பது எனது விருப்பம். ஊடகங்களின் ஆதரவு மற்றும் பொய்களால் அவர்கள் ஒரு பெரிய கதாநாயகராக உருவாகி இருக்கிறார்கள் என்று பேசினார்.
இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நிதிஷ் குமார் கூறும்போது, இந்த சந்திப்பின்போது, குறிப்பிடும்படியாக, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவது பற்றி நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். வரவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து வருகிறோம்.
அடுத்து என்ன விசயங்கள் செய்யப்பட்டாலும், அது தேச நலனிற்காகவே இருக்கும். தற்போது ஆட்சி செய்து வருபவர்கள், செய்வதற்கு எதுவும் இல்லை. அவர்கள் சொந்த விளம்பரத்திற்கான விசயங்களையே செய்து கொண்டிருக்கின்றனர். நாட்டின் முன்னேற்றத்திற்காக என்று எதுவும் செய்யப்படவில்லை என கூறினார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவை சந்திக்க நிதிஷ் குமார் புறப்பட்டு செல்கிறார் என தகவல் வெளியானது. எனினும், நிதிஷ் குமாரின் நடவடிக்கைகளை கவனித்து வந்த, தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் அடுத்த நாள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசும்போது, 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க ஆந்திர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு முயன்றார். எனினும், அதில் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என குறிப்பிட்டார்.
2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்களை நிதிஷ் குமார் சந்தித்து வரும் சூழலில் பிரசாந்த் கிஷோர் கூறும்போது, பீகாரை பற்றி முதலில் நிதிஷ் குமார் கவலைப்படட்டும். பீகார் செயலற்ற அரசாக முடங்கி போயுள்ளது என பேசியது பரபரப்பு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து அவர் கூறும்போது, தேஜஸ்வி யாதவ் முதன்முதலில் நடந்த அமைச்சரவை கூட்டத்திலேயே பேசும்போது, 10 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என கூறினார். அவரால் அப்படி 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்க முடியாது என்று ஒவ்வொருவருக்கும் தெரியும்.
லாலு பிரசாத்தின் மகனாக தேஜஸ்வி யாதவ் இல்லையென்றால், நாட்டில் அவருக்கு என்ன வேலை கிடைத்து இருக்கும்? என்றும் பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று கூறும்போது, அவர்கள் (பா.ஜ.க.) நாட்டின் வரலாற்றை மாற்ற விரும்புகிறார்கள். அதனாலேயே நான் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து வருகிறேன்.
எனக்கென்று தனிப்பட்ட செயல்திட்டம் எதுவும் இல்லை. ஒவ்வொருவரின் நன்மைக்காகவே அதனை நான் செய்து வருகிறேன். எனக்காக நான் எதனையும் செய்யமாட்டேன் என்று நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
அவர், தனது தனிப்பட்ட லாபத்திற்காக எதுவும் செய்யாமல், மக்களின் நலனிற்காகவே வேலைகளை செய்வேன் என உறுதிப்பட கூறியதுடன், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு பற்றிய அடுத்து மேற்கொள்ளும் விசயங்களை, அதன் முடிவுகளுக்கு ஏற்ப வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் 10-ந்தேதி முடிந்த பின்னர் பாட்னா நகரில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களுடன் சந்திப்பை நடத்தும் திட்டம் ஒன்றையும் சமீபத்தில் அவர் வெளியிட்டார். அதில், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான திட்டங்களை வகுப்பது பற்றி ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.