நடிகர் அமிதாப்பச்சன் கருத்தை முன்வைத்து பா.ஜனதா-திரிணாமுல் காங்கிரஸ் டுவிட்டரில் மோதல்
நடிகர் அமிதாப்பச்சன் கருத்தை முன்வைத்து, டுவிட்டரில் பா.ஜனதா-திரிணாமுல் காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டது.
புதுடெல்லி,
கொல்கத்தாவில் சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. நேற்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முன்னிலையில் பேசிய இந்தி நடிகர் அமிதாப்பச்சன், கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது என்று கூறினார்.
அதே மேடையில், பின்னணி பாடகர் அரிஜித் சிங்கை பாடுமாறு மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டார். அதற்கு அரிஜித் சிங், 'நிறம் காவியாக இருக்கும்' என்ற பாடலை பாடினார்.
இந்த நிகழ்வுகளை முன்வைத்து பா.ஜனதாவுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே 'டுவிட்டர்' பக்கத்தில் வார்த்தை மோதல் வெடித்துள்ளது.
கொடுங்கோலர்
பா.ஜனதா தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா கூறியதாவது:-
அமிதாப்பச்சனின் வார்த்தைகள், கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியை மேடையில் வைத்துக்கொண்டு பேசியவை என்பதால், அவை மிகவும் தீர்க்கதரிசனமாக இருக்கும். பெண் கொடுங்கோலரின் முன்பு கண்ணாடியை காட்டியதுபோல் இருக்கிறது.
மேலும், மேற்கு வங்காளத்தின் எதிர்காலம் காவி என்பதை மம்தாவுக்கு நினைவுபடுத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திரைப்படங்கள் தடை
அதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜகான் கூறியதாவது:-
திரைப்படங்களை தடை செய்வது, பத்திரிகையாளர்களை கைது செய்வது, உண்மை பேசியதற்காக சாமானியர்களை தண்டிப்பது என கொடுங்கோல் ஆட்சியின் அறிகுறிகள் பா.ஜனதா ஆட்சியில் காணப்படுகின்றன. சுதந்திரத்துக்கு பா.ஜனதா உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. ஆனால், அமித் மாளவியா மற்றவர்களை குற்றம் சாட்டுகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும், திரிணாமுல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரிஜு தத்தா, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி காவி உடையில் 'பெமினா மிஸ் இந்தியா' போட்டியில் பங்கேற்ற பழைய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதற்கு பா.ஜனதா பிரமுகர் லாக்கட் சட்டர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.