கார்கேவை கொல்ல பா.ஜ.க. சதி திட்டம்; வீடியோ வெளியிட்டு காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு


கார்கேவை கொல்ல பா.ஜ.க. சதி திட்டம்; வீடியோ வெளியிட்டு காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
x

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய பா.ஜ.க.வினர் சதி திட்டம் தீட்டி உள்ளனர் என அக்கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான ரன்தீப் சுர்ஜேவாலா பெங்களூரு நகரில் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய பா.ஜ.க.வினர் சதி திட்டம் தீட்டி உள்ளனர் என பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சித்தாப்பூர் வேட்பாளரான பிரியங் கார்கே என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 13-ந்தேதி பா.ஜ.க.வை சேர்ந்த மணிகண்ட ரத்தோட் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சுர்ஜேவாலா கூறும்போது, கர்நாடகாவில் உள்ள மக்கள் அனைவரின் ஆசிகளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக உள்ளன. சட்டசபை தேர்தலில் முழுமையான தோல்வியை சந்திக்க உள்ள சூழலில், பா.ஜ.க. கொலை திட்டம் ஒன்றை தீட்டி உள்ளது.

இதன்படி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மற்றும் அவரது குடும்பத்தினரை கொல்ல பா.ஜ.க.வினர் சதி திட்டம் தீட்டி உள்ளனர். அக்கட்சியின் சித்தாப்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள மணிகண்டன் பேசிய ஆடியோ பதிவில் இருந்து இது தற்போது தெளிவாகி உள்ளது என கூறியுள்ளார்.

கடந்த 2-ந்தேதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. மற்றும் பொது செயலாளரான மதன் திலாவர் கூறும்போது, 80 வயது ஆகிற கார்கேவை எந்த நேரத்திலும் கடவுள் அழைத்து கொள்வார் என கூறினார். தற்போது, கார்கே மற்றும் அவரது ஒட்டு மொத்த குடும்பத்தினைரையும் படுகொலை செய்ய அக்கட்சி தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

பிரதமர் தொடர்ந்து அமைதியாக இருப்பார் என எனக்கு தெரியும். கர்நாடக போலீசார் மற்றும் இந்திய தேர்தல் ஆணையமும் கூட அமைதி காக்கும். ஆனால், கர்நாடக மக்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள். அவர்கள் சரியான பதிலடி தருவார்கள் என கூறியுள்ளார். இந்த சந்திப்பின்போது, பவன் கேராவும் உடன் காணப்பட்டார். இந்த பரபரப்பு உரையாடல் அடங்கிய வீடியோ ஒன்றையும் சுர்ஜேவாலா தனது டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார்.


Next Story