'பிரிவினை பயங்கரங்கள் நினைவுநாள்': நாடு முழுவதும் பா.ஜ.க. அமைதி பேரணி நடத்த முடிவு


பிரிவினை பயங்கரங்கள் நினைவுநாள்:  நாடு முழுவதும் பா.ஜ.க. அமைதி பேரணி நடத்த முடிவு
x

நாட்டின் 2-வது ‘பிரிவினை பயங்கரங்கள் நினைவுநாளை’ முன்னிட்டு பா.ஜ.க. இன்று மாலை டெல்லியில் அமைதி பேரணி நடத்துகிறது.

புதுடெல்லி,



'பிரிவினை பயங்கரங்கள் நினைவுநாளை' முன்னிட்டு நாடு முழுவதும் பா.ஜ.க. அமைதி பேரணி நடத்த முடிவு செய்துள்ளது. ஆகஸ்டு 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரையில் பல்வேறு அலுவலகங்களிலும் மற்றும் பிற இடங்களிலும் கண்காட்சிகளை நடத்தவும் அக்கட்சி திட்டமிட்டு உள்ளது. இதற்காக 6 நபர் கொண்ட குழு ஒன்றையும் உருவாக்கி உள்ளது.

நாட்டின் 2-வது 'பிரிவினை பயங்கரங்கள் நினைவுநாளை' முன்னிட்டு தலைநகர் டெல்லியில் ஜந்தர்மந்தர் பகுதியில் பா.ஜ.க. இன்று மாலை அமைதி பேரணி ஒன்றை நடத்துகிறது. அதில் அக்கட்சி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்கிறார்.

இந்த பேரணியின்போது, பிரிவினையின் வலியை அனுபவித்த குடும்பங்களை பா.ஜ.க.வினர் சந்திக்க உள்ளனர் என்று அந்த குழுவில் இடம் பெற்றுள்ள அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் துஷ்யந்த் கவுதம் கூறியுள்ளார்.

அப்படி சந்திக்கும்போது, கிடைக்கும் அவர்களின் நினைவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்படும். பிரிவினை பற்றிய புகைப்படங்களும் வலைதளங்களில் வெளியிடப்படும். அதனால், மத அடிப்படையில் நாடு பிரிந்த பின்னர் மக்களுக்கு ஏற்பட்ட வலியை பற்றி புதிய தலைமுறையினர் அறிந்து கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினை உண்டானது. இதுபற்றி பிரதமர் மோடி கடந்த ஆண்டு குறிப்பிடும்போது, பிரிவினையின் வலியை ஒருபோதும் மறந்து விடமுடியாது.

நமது லட்சக்கணக்கான சகோதர, சகோதரிகள் புலம் பெயர்ந்தனர். முன்பின் யோசிக்காமல் ஏற்பட்ட வெறுப்பு மற்றும் வன்முறையால் எண்ணற்றோர் உயிரிழந்தனர். நம்முடைய மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் ஆகியவற்றின் நினைவாக ஆகஸ்டு 14-ந்தேதி 'பிரிவினை பயங்கரங்கள் நினைவு நாளாக' அனுசரிக்கப்படும் என கூறினார். அதன்படி, நாட்டின் 2-வது 'பிரிவினை பயங்கரங்கள் நினைவுநாள்' இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.


Next Story