அரசு நிகழ்ச்சியில் காவலரை கன்னத்தில் அறைந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.; பரபரப்பு வீடியோ
அரசு நிகழ்ச்சி பற்றிய பேனரில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. காம்பிளேவின் பெயர் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது.
புனே,
மராட்டியத்தின் புனே கன்டோன்மென்ட் தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுனில் காம்பிளே. இந்நிலையில், புனே நகரில் உள்ள சசூன் அரசு மருத்துவமனையில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.
இதில் மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவாரும் கலந்து கொண்டார். இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்து படி வழியே காம்பிளே கீழே இறங்கி வந்தபோது, அவர் வழியில் வந்த நபர் ஒருவரின் கன்னத்தில் அறையும் வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த நபர் பண்ட்கார்டன் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர். எனினும், இந்த குற்றச்சாட்டுகளை காம்பிளே மறுத்திருக்கிறார். அவர் கூறும்போது, நான் யாரையும் அடிக்கவில்லை. நிகழ்ச்சிக்கு பின்னர் படி வழியே கீழே இறங்கி வந்தபோது குறுக்கே வந்த அவரை நான் தள்ளி விட்டு, சென்றேன் என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் பற்றி கான்ஸ்டபிள் அளித்த புகாரின் பேரில், காம்பிளே மீது 353-வது பிரிவின் கீழ் (பணியில் இருந்த அரசு ஊழியரை வேலை செய்ய விடாமல் தடுக்கும் வகையில், அடித்தல் அல்லது குற்ற செயலில் ஈடுபடுதல்) வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆனால், இந்த நிகழ்ச்சி பற்றிய பேனரில் காம்பிளேவின் பெயர் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால், அவர் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதனால், கீழே இறங்கியபோது, தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டரான ஜிதேந்திரா சடாவ் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிளை அவர் அறைந்திருக்கிறார்.
வீடியோ வைரலான நிலையில், காம்பிளே கூறும்போது, ஒருவர் என்னுடைய சட்டையின் மேற்பகுதியை பிடித்து இழுத்தும், மற்றொரு நபர் மூன்று முறை முழங்கையால் இடித்தபடியும் இருந்தனர். நான் அவர்களை பதிலுக்கு தள்ளி விட்டேன். அவர்கள் யாரென எனக்கு தெரியாது என கூறியுள்ளார்.