மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் கல்லறை அலங்கரிக்கப்பட்டதால் சர்ச்சை
மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் கல்லறை அலங்கரிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை,
மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி மும்பையை சேர்ந்த யாகூப் மேமன். குண்டு வெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இவர், கடந்த 2015-ம் ஆண்டு நாக்பூர் ஜெயிலில் தூக்கிலிடப்பட்டார். பின்னர் அவரது உடல் தென்மும்பை பகுதியில் உள்ள படா கப்ரஸ்தானில் அடக்கம் செய்யப்பட்டது. இந்தநிலையில் மும்பையில் உள்ள யாகூப் மேமன் கல்லறை விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
யாகூப் மேமன் கல்லறையில் மார்பிள் கல் பதித்து, அதற்கு எல்.இ.டி. விளக்கு அலங்காரம் போடப்பட்டு இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் கல்லறையில் போடப்பட்டு இருந்த எல்.இ.டி. விளக்குகளை அகற்றினர். மேலும் இதுகுறித்து துணை கமிஷனர் அளவில் போலீசார் விசாரணை முடக்கி உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த உத்தவ் தாக்கரே ஆட்சியில் தான் யாகூப் மேமன் புதைக்கப்பட்ட இடம் கல்லறையாக மாற்றப்பட்டதாக பா.ஜனதா தலைவர்கள் சிலர் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் யாகூப் மேமன் கல்லறையை, புனித இடமாக மாற்றவும் முயற்சிகள் நடந்து உள்ளதாக தெரிவித்தனர்.