பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளராக ராஜாஜியின் கொள்ளு பேரன் கேசவன் நியமனம்
ராஜாஜியின் கொள்ளு பேரன் கேசவன், காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 23-ந்தேதி விலகினார்.
புதுடெல்லி,
பா.ஜ.க.வில் கடந்த ஆண்டு இணைந்த ராஜாஜியின் பேரன் சி.ஆர். கேசவன் அக்கட்சியின் செய்தி தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவரை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முறைப்படி தேசிய செய்தி தொடர்பாளராக நியமித்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்த பெருமையை கொண்டவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி. ராஜகோபாலச்சாரி. ராஜாஜி என கட்சியினரால் அழைக்கப்பட்ட இவருடைய கொள்ளு பேரன் சி.ஆர். கேசவன். பாரம்பரிய காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்த அவர், கட்சியில் இருந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 23-ந்தேதி விலகினார்.
கடந்த 2001-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள, ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சி மையத்தின் துணை தலைவர் (ஒரு மாநில மந்திரிக்கு இணையானது) என்ற பதவியை வகித்த அனுபவம் கொண்டவர்.
இதுதவிர, பிரசார் பாரதி வாரியத்தின் உறுப்பினர், இந்திய இளைஞர் காங்கிரசின் தேசிய கவுன்சில் உறுப்பினர் மற்றும் தேசிய ஊடக குழு உறுப்பினர் என எண்ணற்ற பதவிகளை வகித்திருக்கிறார். 2 தசாப்தங்களாக காங்கிரசில் இருந்து பணியாற்றிய அவர், கடந்த ஆண்டு ஏப்ரலில் பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், அக்கட்சியின் முக்கிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.