சித்தராமையாவுக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய பா.ஜனதாவினர்


சித்தராமையாவுக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய பா.ஜனதாவினர்
x

சித்தராமையாவுக்கு எதிராக நேற்று 2-வது நாளாக பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிக்கமகளூருவுக்கு சென்ற சித்தராமையாவுக்கு எதிராக கருப்பு கொடி காட்டியது மட்டுமல்லாமலும் காங்கிரஸ் தொண்டர்களுடன் பா.ஜனதாவினர் கைகலப்பில் ஈடுபட்டனர்.

சிக்கமகளூரு:

சித்தராமையாவுக்கு எதிராக நேற்று 2-வது நாளாக பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிக்கமகளூருவுக்கு சென்ற சித்தராமையாவுக்கு எதிராக கருப்பு கொடி காட்டியது மட்டுமல்லாமலும் காங்கிரஸ் தொண்டர்களுடன் பா.ஜனதாவினர் கைகலப்பில் ஈடுபட்டனர்.

போலீஸ் தடியடி

சிவமொக்காவில் கடந்த 15-ந் தேதி சுதந்திர தின விழா நடந்தது. அப்போது சிவமொக்கா டவுன் பி.எச். சாலை அமீர் அகமது சர்க்கிளில் ஒரு அமைப்பினர் வீரசாவர்க்கரின் உருவப்படம் அடங்கிய பேனரை அங்கு வைத்திருந்தனர். அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அதை அகற்றினர். மேலும் அவர்கள் திப்பு சுல்தானின் உருவப்படம் அடங்கிய பேனரை வைத்து சுதந்திர தின விழாவை கொண்டாட முயன்றனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தினர். இந்த நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த சித்தராமையா, முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் பகுதியில் வீரசாவர்க்கர் உருவப்படம் அடங்கிய பேனரை ஏன் வைத்தார்கள் என்று கூறி விமர்சித்தார்.

கருப்பு கொடி

இதனால் கொதிப்படைந்த பா.ஜனதாவினர் மற்றும் இந்து அமைப்பினர் சித்தராமையாவுக்கு எதிராக நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றும் அவர்களது போராட்டம் தொடர்ந்தது. நேற்று சித்தராமையா சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரிக்கு வந்தார். அவர் கொப்பா தாலுகா மக்கிகொப்பா கிராமம் வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் பா.ஜனதா மற்றும் பஜ்ரங்தள அமைப்பினர் நின்று கொண்டு சித்தராமையாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அவர்கள் கைகளில் வீரசாவர்க்கரின் உருவப்படங்களையும் வைத்திருந்தனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் சித்தராமையாவின் கார் போராட்டக்காரர்கள் திரண்டிருந்த பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அவர்கள் சித்தராமையாவின் காரை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் கடுமையான முறையில் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் சித்தராமையாவை நோக்கி கருப்பு கொடி காட்டினர். மேலும் அவரது கார் மீது கருப்பு கொடியை வீசினர்.

சித்தராமையாவின் காரை...

அதுமட்டுமின்றி 'இந்து விரோதி சித்து இந்த புண்ணிய பூமிக்கு வர வேண்டாம்' என்று கூறி கோஷமிட்டனர். ஆனால் சித்தராமையாவின் கார் அங்கு நிற்காமல் சென்றுவிட்டது. இதையடுத்து சித்தராமையா சிருங்கேரிக்கு வந்தார். அவர் சிருங்கேரியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதையடுத்து அவர் சிருங்கேரி அருகே மெனசே கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்போது அங்கு வந்த பஜ்ரங்தள தொண்டர்கள் மற்றும் பா.ஜனதாவினர் 'கோ பேக்'(திரும்பி செல்) என்று கோஷமிட்டபடி சித்தராமையாவின் காரை முற்றுகையிட வந்தனர்.

அவர்கள் சித்தராமையாவை உடனடியாக சிக்கமகளூருவை விட்டு சென்றுவிடும்படி கூறி பலமாக கோஷங்களை எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்கள் அங்கு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

கைகலப்பு

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் போலீசாரிடம் முண்டியடித்துக் கொண்டு சித்தராமையாவை நோக்கி சென்றனர். இதனால் போலீசாருக்கும், பா.ஜனதா-பஜ்ரங்தள தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் அங்கு காங்கிரசாரும் வந்தனர். இதனால் பா.ஜனதா - காங்கிரசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் இருதரப்பினரையும் தடுக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு திரண்டிருந்த இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் ஒருவரையொருவர் கைகளால் தாக்கிக் கொண்டனர்.

இதையடுத்து இருதரப்பினரையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது காங்கிரசார், போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி குற்றம்சாட்டி கோஷம் எழுப்பினர்.

9 பேர் கைது

இதையடுத்து போலீசார் சித்தராமையாவின் காரை முற்றுகையிட முயன்ற 20 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் நேற்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே நேற்று முன்தினம் சித்தராமையா குடகு மாவட்டம் குஷால் நகர் அருகே திதிமதிக்கு சென்றிருந்தார். அப்போது அவரது கார் மீது பா.ஜனதாவினர் முட்டைகளை வீசினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக நேற்று குடகு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சசிதர் குஷால் நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 506-ன்(கொலை மிரடல்) கீழ் வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்தனர்.

காங்கிரசார் கண்டன ஊர்வலம்

இந்த நிலையில் சித்தராமையாவுக்கு எதிராக பா.ஜனதாவினர் நடத்தி வரும் தொடர் போராட்டத்தை கண்டித்து நேற்று மைசூரு, மண்டியா, குடகு மாவட்டங்களில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். மைசூருவிலும், மண்டியாவிலும் காங்கிரசார் பா.ஜனதாவினரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் வீரசாவர்க்கரின் உருவப்படங்களை எரித்தனர்.

மேலும் குடகு மாவட்டம் மடிகேரியில் காங்கிரசார் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டு பா.ஜனதாவினரை கண்டித்து கண்டன ஊர்வலமும் நடத்தினர்.


Next Story