எதிர்க்கட்சிகளுக்கு போட்டியாக கூட்டணி பலத்தை அதிகரிக்க பா.ஜனதா திட்டம்


எதிர்க்கட்சிகளுக்கு போட்டியாக கூட்டணி பலத்தை அதிகரிக்க பா.ஜனதா திட்டம்
x
தினத்தந்தி 1 July 2023 5:30 AM IST (Updated: 1 July 2023 5:31 AM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சிகளுக்கு போட்டியாக கூட்டணி பலத்தை அதிகரிக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. புதிதாக பல கட்சிகளை சேர்க்க முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் வெற்றி பெற்று, தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா விரும்புகிறது.

அதே சமயத்தில், பா.ஜனதாவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க எதிர்க்கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு போட்டியாக பா.ஜனதாவும் தனது கூட்டணி பலத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பா.ஜனதா வட்டாரங்கள் கூறியதாவது:-

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம், விரைவில் நடக்கிறது. அக்கூட்டம், கூட்டணி பலத்தை காட்டுவதாக அமையும். உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, அகாலி தளம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் விலகிய பிறகு, தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரிய கட்சிகளே இல்லை என்ற தோற்றத்தை நொறுக்குவதாகவும் அமையும்.

கடந்த மே மாதம், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்புவிழாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகளை கண்டித்து வெளியிட்ட கூட்டறிக்கையில், 13 கட்சிகளின் தலைவர்களது கையெழுத்தை பா.ஜனதா பெற்றது. சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள சில கட்சிகளின் தலைவர்கள் ஆகியோரும் அதில் அடங்குவர். அவர்கள் அனைவரும் கூட்டணியில் உள்ளனர்.

இதுதவிர, பீகாரில் மட்டும் 3 கட்சிகள் கூட்டணியில் சேர வாய்ப்புள்ளது. ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானை மீண்டும் சேர்க்க முயன்று வருகிறோம்.

ஐக்கிய ஜனதாதளத்தில் இருந்து விலகிய முன்னாள் மத்திய மந்திரி உபேந்திர குஷ்வாகா, அக்கூட்டணியில் இருந்து விலகிய முன்னாள் முதல்-மந்திரி ஜிதன்ராம் மஞ்சி ஆகியோர் சமீபத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தனர். எனவே, அவர்களும் பா.ஜனதாவுடன் கைகோர்க்க வாய்ப்புள்ளது.

மத்திய மந்திரிசபை விரைவில் மாற்றி அமைக்கப்படலாம் என்ற பேச்சு உலவுகிறது. அதில், புதிதாக சேரும் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.

தற்போது, கூட்டணி கட்சிகளை சேர்ந்த பசுபதிகுமார் பராஸ், அனுப்ரியா படேல், ராம்தாஸ் அத்வாலே ஆகிய 3 பேர் மட்டும் மத்திய மந்திரிகளாக உள்ளனர்.

மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, நேற்று முன்தினம் இரவு, டெல்லியில் பா.ஜனதா தலைவர்களை சந்தித்தார். மத்திய மந்திரிசபையில் அவரது கட்சி சேருவது பற்றி பேசப்பட்டு இருக்கலாம்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story