சட்டசபை தேர்தலில் கோலாரில் போட்டியிட்டால் சித்தராமையாவுக்கு எதிராக கே.எச்.முனியப்பாவை களம் இறக்க பா.ஜனதா திட்டம்


சட்டசபை தேர்தலில் கோலாரில் போட்டியிட்டால் சித்தராமையாவுக்கு எதிராக கே.எச்.முனியப்பாவை களம் இறக்க பா.ஜனதா திட்டம்
x

கர்நாடக சட்டசபை தேர்தலில் கோலார் தொகுதியில் போட்டியிட்டால் சித்தராமையாவுக்கு எதிராக கே.எச்.முனியப்பாவை களம் இறக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு:

சித்தராமையா முயற்சி

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2023) தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மீண்டும் முதல்-மந்திரி பதவியை பிடித்துவிட வேண்டும் என்று சித்தராமையா தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் அவர் தாவணகெரேயில் தனது பிறந்த நாள் மாநாட்டை மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். இந்த மாநாடு சித்தராமையாவுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது. அந்த மாநாடு மூலம் சித்தராமையாவின் மக்கள் செல்வாக்கு மேலும் அதிகரித்துள்ளது.

சித்தராமையா தனது வருணா தொகுதியை மகன் யதீந்திராவுக்கு விட்டு கொடுத்துவிட்டார். அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது சாமுண்டீஸ்வரி மற்றும் பாதாமி தொகுதியில் போட்டியிட்டார். இதில் அவர் சாமுண்டீஸ்வரியில் தோல்வியை தழுவினார். பாதாமியிலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. வெறும் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தான் வெற்றிக்கனியை பறித்தார். ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை நடத்திய, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய தனக்கு நேர்ந்த இந்த அரசியல் பின்னடைவை கண்டு அவர் சற்று அதிர்ந்து போனார்.

ஆர்வம் காட்டவில்லை

இந்த நிலையில் சித்தராமையா வருகிற சட்டசபை தேர்தலுடன் தனது அரசியல் பயணத்தை முடித்து கொள்வதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் மக்களின் ஆதரவு அவருக்கு அதிகமாக கிடைக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு எடுக்க முடியாமல் சித்தராமையா தடுமாறி வருகிறார். மீண்டும் பாதாமி தொகுதியில் போட்டியிடுவதில் சித்தராமையா ஆர்வம் காட்டவில்லை.

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை தொகுதியில் போட்டியிடுவது குறித்து அவர் ஆலோசித்து வருகிறார். இன்னொரு வாய்ப்பாக கோலார் தொகுதியில் நிற்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். அங்கு முஸ்லிம் வாக்குகள் அதிகமாக உள்ளனர். முஸ்லிம் வாக்குகள் மற்றும் காங்கிரஸ் வாக்குகள் ஒன்று சேர்ந்தால் எளிதாக வெற்றி பெற்றுவிட முடியும் என்று சித்தராமையா கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நோக்கத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கொத்தூர் மஞ்சுநாத் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை சித்தராமையா சமீபத்தில் டெல்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் சேர்த்தார்.

கே.எச்.முனியப்பா

இதற்கு காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.எச்.முனியப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அவரது எதிர்ப்பை பொருட்படுத்தாமல் கொத்தூர் மஞ்சுநாத்தை கட்சியில் சேர்த்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தனது எதிர்ப்பு நிராகரிக்கப்பட்டதால் கே.எச்.முனியப்பா கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. கே.எச்.முனியப்பாவை பா.ஜனதாவுக்கு இழுத்து சித்தராமையாவுக்கு எதிராக அவரை களம் இறக்கலாமா? என்று அக்கட்சி தலைவர்கள் தீவிரமாக ஆலோசிக்க தொடங்கியுள்ளனர்.

சித்தராமையாவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் வியூகம் வகுத்து செயல்பட திட்டமிட்டுள்ளனர். தேர்தல் நெருங்க, நெருங்க கட்சிகளின் திட்டம் என்ன என்பது தெரியவரும்.


Next Story