ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் சேர தலா ரூ.20 கோடி பேரமா? பகிரங்க குற்றச்சாட்டால் பரபரப்பு


ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் சேர தலா ரூ.20 கோடி பேரமா? பகிரங்க குற்றச்சாட்டால் பரபரப்பு
x

டெல்லியில் 4 ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் சேர தலா ரூ.20 கோடி தருவதாக பேரம் பேசப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பா.ஜ.க. பேரம்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி பொதுச்செயலாளர் சஞ்சய் சிங் எம்.பி., நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்கள் கட்சியின் அஜய் தத், சஞ்சீவ் ஜா, சோம்நாத் பாரதி, குல்தீப் குமார் ஆகிய 4 எம்.எல்.ஏ.க்களை அவர்களுடன் நட்புறவு வைத்துள்ள பா.ஜ.க. தலைவர்கள் அணுகி உள்ளனர். அவர்கள் பா.ஜ.க.வில் சேர தலா ரூ.20 கோடி தரப்படும், வேறு எம்.எல்.ஏ.க்களை அவர்கள் தங்களுடன் அழைத்து வந்தால் தலா ரூ.25 கோடி வழங்கப்படும் என பேரம் பேசி உள்ளனர்.

இதை அவர்கள் ஏற்றுக்கொண்டு, பா.ஜ.க.வில் சேராவிட்டால் மணிஷ் சிசோடியா சந்தித்து வருவதைப்போன்று அவர்கள் மீது சி.பி.ஐ., அமலாக்கத்துறையால் பொய் வழக்குகள் போடப்படும் என எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் கூறி உள்ளனர்.

பிரதமர் மோடி முயற்சி

பிரதமர் மோடி ஆம் ஆத்மி கட்சியை பிளவுபடுத்தி அதன் எம்.எல்.ஏ.க்களை பிரித்து, விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி, டெல்லி அரசை கவிழ்க்க முயற்சிக்கிறார். தனது ஆட்களை எங்கள் எம்.எல்.ஏ.க்களிடம் அனுப்பி பணம் தருவதாக கூறி பேரம் பேசுகிறார். அவர்கள் கட்சி மாறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என மிரட்டுகிறார்.

மராட்டியத்தில் ஏக்நாத் ஷிண்டேயை கொண்டு அவர்கள் நடத்திய முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது, ஆனால் மணிஷ் சிசோடியாவைக் கொண்டு நடத்தி விடலாம் என மேற்கொண்ட முயற்சி தோல்வி கண்டுள்ளது.

கெஜ்ரிவாலும் உறுதிபடுத்தினார்

மோடி அவர்களே, வெட்கமாக இருக்கிறது. இத்தகைய முயற்சிகளை நிறுத்திக்கொள்ளுங்கள். நாடு எதிர்கொண்டு வருகிற விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் உறுதி செய்துள்ளார்.

இந்த பேட்டியின்போது, பா.ஜ.க. தலைவர்கள் நாடியதாக கூறப்படுகிற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் (அஜய் தத், சஞ்சீவ் ஜா, சோம்நாத் பாரதி, குல்தீப் குமார்) உடன் இருந்தனர்.

இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.


Next Story