ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க எம்.எல்.ஏக்களுக்கு ரூ.800 கோடி வழங்க பாஜக திட்டம் - அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு


ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க எம்.எல்.ஏக்களுக்கு ரூ.800 கோடி வழங்க பாஜக திட்டம் - அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 25 Aug 2022 2:16 PM IST (Updated: 25 Aug 2022 2:17 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம்அத்மி கட்சியின் அனைத்து எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

புதுடெல்லி,

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்களை டெல்லி முதல் மந்திரியும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தார்.

இன்று ஆம்ஆத்மி கட்சியின் அனைத்து எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இன்று காலை 11 மணியளவில் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் கூட்டம் நடைபெற இருந்தது.

இந்த நிலையில், பல ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கெஜ்ரிவாலின் இல்லத்தில் கூட்டம் நடப்பதற்கு முன்னதாகவே கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் எங்கு சென்றார்கள் எனத் தெரியவில்லை என்ற தகவல் வெளியானது.

இதனையடுத்து டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான அரசை கவிழ்க்க, ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பாரதிய ஜனதா மிரட்டி, கவர்ந்து இழுத்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியது. கெஜ்ரிவால் தலைமையிலான அரசைக் கவிழ்க்க ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு பாரதிய ஜனதா கட்சி ரூ.20 கோடி வழங்கியதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சவுரப் பரத்வாஜ் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இன்றைய ஆலோசனை கூட்டத்திற்கு முன்னதாக பல எம்எல்ஏக்கள் கண்டுபிடிக்க முடியாத நிலையில், கூட்டத்தில் எத்தனை எம்எல்ஏக்கள் கலந்து கொள்வார்கள் என்பதை ஆம் ஆத்மி கட்சியும், எதிர்க்கட்சிகளும் உன்னிப்பாக கவனித்து வந்தன.


அதன்பின் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம்அத்மி கட்சியின் அனைத்து எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் எத்தனை எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர் என்ற தகவல் வெளியானது.

சில நிமிடங்களில் முடிவடைந்த கூட்டத்தில் கெஜ்ரிவால் உட்பட 53 எம்எல்ஏக்கள் நேரடியாக கலந்து கொண்டனர். மந்திரி சத்யேந்தர் ஜெயின் சிறையில் உள்ளதால் பங்கேற்கவில்லை. 7 எம்எல்ஏக்கள் வெளியில் இருந்ததாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். ஓக்லா எம்எல்ஏ அமானதுல்லா கான் தொலைபேசி வாயிலாக இக்கூட்டத்தில் பங்கேற்றார்.

அதன்படி, இன்று நடைபெற்ற கூட்டத்தில் 62 எம்எல்ஏக்களில் 53 பேர் கலந்து கொண்டனர். டெல்லியில் பாஜகவின் ஆபரேஷன் தாமரை தோல்வியடைந்தது. என்று எம்.எல்.ஏ எஸ் பரத்வாஜ் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "சபாநாயகர் வெளிநாட்டில் இருக்கிறார் மற்றும் மணீஷ் சிசோடியா இமாச்சல் பிரதேசத்தில் இருக்கிறார். முதல் மந்திரி மற்ற எம்எல்ஏக்களுடன் தொலைபேசியில் பேசினார், அனைவரும் தங்கள் கடைசி மூச்சு வரை கெஜ்ரிவாலுடன் இருப்பதாக தெரிவித்தனர்.

எங்கள் 12 எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொண்டு கட்சியை உடைக்கும்படி பா.ஜ.க. aவர்களை அனுகியது. 40 எம்எல்ஏக்களை உடைக்க நினைத்தனர்" என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

அதனை தொடர்ந்து, மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்த அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் எம்எல்ஏக்கள் ராஜ்காட் வந்தடைந்தனர். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில்:-

சில நாட்களுக்கு முன்பு மணீஷ் சிசோடியா மீது போலி எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அவரது வீட்டில் 12 மணி நேரம் சிபிஐ சோதனை நடத்தியது. அதன் பிறகும் அவர்களால் எந்த ஆவணங்களோ, கணக்கில் வராத பணத்தையோ கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனை தொடர்ந்து, மணிஷ் சிசோடியாவுக்கு பாஜக தூது அனுப்பியது. ஆம் ஆத்மியை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டது. மேலும் அவர் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

அவர் வேறு சில எம்எல்ஏக்களுடன் பாஜகவில் சேர வேண்டும் என்று அவர்கள் விரும்பினர், அவர்கள்(பாஜக) அவருக்கு (மணிஷ் சிசோடியா) டெல்லி முதல் மந்திரி பதவியை வழங்குவதாக ஆசை வார்த்தை கூறி வலைவீசினர்.

மனீஷ் சிசோடியா போன்ற ஒருவரை என்னுடன் பெற்றதற்காக எனது முந்தைய வாழ்க்கையில் நான் நல்ல செயல்களைச் செய்திருக்க வேண்டும். அவர் அவர்களின் வாய்ப்பை நிராகரித்தார்.

இப்போது அவர்கள் (பாஜக) எங்கள் எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர பணம் கொடுக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சி தலா எங்கள் எம்எல்ஏக்களுக்கு ரூ.20 கோடி வழங்குவதாக எனக்குச் செய்தி கிடைத்தது.ஆனால் ஒரு எம்.எல்.ஏ கூட இவர்களின் கோரிக்கையை ஏற்காதது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

எனது அரசை கவிழ்க்க பாஜகவுக்கு 40 எம்எல்ஏக்கள் தேவை, இதற்காக ரூ.800 கோடி வைத்துள்ளது.நேர்மையான கட்சிக்கு நீங்கள் வாக்களித்துள்ளீர்கள் என்பதை டெல்லி மக்களிடம் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.நாங்கள் செத்தாலும் நாட்டு மக்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story