பெங்களூருவில் பா.ஜனதா எம்.எல்.ஏ. கார் மீது முட்டை வீச்சு
பெங்களூருவில் பா.ஜனதா எம்.எல்.ஏ. கார் மீது முட்டை வீசிய சம்பவம் நடந்து உள்ளது.
பெங்களூரு:
காங்கிரஸ் போராட்டம்
வீர சாவர்க்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கார் மீது குடகில் வைத்து பா.ஜனதாவினர் முட்டை வீசி இருந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ. கார் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
பெங்களூரு எலகங்கா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருபவர் எஸ்.ஆர்.விஸ்வநாத். இவர் பெங்களூரு வளர்ச்சி ஆணையம் (பி.டி.ஏ.) தலைவராகவும் உள்ளார். இந்த நிலையில் சோழதேவனஹள்ளி அருகே சிரகட்டா என்ற கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எஸ்.ஆர்.விஸ்வநாத் சென்றார். அவருக்கு பா.ஜனதா தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முட்டை வீச்சு
இதனால் திறந்த காரில் நின்று கொண்டு தொண்டர்களை நோக்கி கையசைத்தப்படி எஸ்.ஆர்.விஸ்வநாத் சென்று கொண்டு இருந்தார். அப்போது கூட்டத்திற்குள் இருந்து எஸ்.ஆர்.விஸ்வநாத் சென்ற கார் மீது முட்டை வீசப்பட்டது. இந்த சம்பவம் நடந்து 2 நாட்கள் ஆன நிலையில் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
சித்தராமையா கார் மீது முட்டை வீசப்பட்டதால் எஸ்.ஆர்.விஸ்வநாத்தின் கார் மீது காங்கிரசார் முட்டை வீசி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து சோழதேவனஹள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.