பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜெய் பிரகாஷ் பாய் படேல் காங்கிரசில் இணைந்தார்


பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜெய் பிரகாஷ் பாய் படேல் காங்கிரசில் இணைந்தார்
x
தினத்தந்தி 20 March 2024 4:17 PM IST (Updated: 20 March 2024 6:04 PM IST)
t-max-icont-min-icon

ஜெய் பிரகாஷ் பாய் படேல் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் எம்.பி. டெக் லால் மஹ்தோவின் மகன் ஆவார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதேவேளை பல கட்சி உறுப்பினர்கள் கட்சி விட்டு கட்சி மாறியும், தங்களது பதவியை ராஜினாமா செய்வதுமான நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜெய் பிரகாஷ் பாய் படேல் இன்று காங்கிரசில் இணைந்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பொறுப்பாளர் குலாம் அகமது மிர், ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்குர், ஜார்க்கண்ட் மந்திரி ஆலம்கிர் ஆலம் மற்றும் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா ஆகியோர் முன்னிலையில் படேல் காங்கிரசில் இணைந்தார்.

படேல் ஹசாரிபாக் மக்களவை தொகுதியின் கீழ் வரும் மண்டு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். முன்னதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். படேல் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் எம்.பி.யான டெக் லால் மஹ்தோவின் மகன் ஆவார்.

இதுகுறித்து ஜெய் பிரகாஷ் கூறியதாவது,

"பா.ஜ.க.வின் கொள்கைகள், எனது தந்தை டெக் லால் மஹ்தோவுடன் கொள்கைகளுடன் ஒத்துப்போகவில்லை. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையை நான் பாராட்டுகிறேன். இந்த மக்களவைத் தேர்தலில் ஜார்க்கண்டில் உள்ள 14 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். எந்த அழுத்தம் காரணமாகவும் நான் காங்கிரசில் இணையவில்லை. ஜார்க்கண்டின் எதிர்கால நன்மைக்காகவும், எனது தந்தையின் கனவை நிறைவேற்றவும், இந்தியா கூட்டணியை வலுப்படுத்தவுமே நான் கட்சியில் இணைந்துள்ளேன். நான் எனது பதவியைப் பற்றிக் கவலைப்படவில்லை.ஜார்க்கண்டை காக்க விரும்புகிறேன்"

இவ்வாறு அவர் கூறினார்.

வரும் தேர்தலில் ஹசாரிபாக் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் படேல் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story