பா.ஜ.க. எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிகோளி வீடு அருகே காங்கிரசார் போராட்டம்
காங்கிரஸ் தலைவர் சிவகுமாருக்கு எதிராக பேசியதற்காக பா.ஜ.க. எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிகோளி வீடு அருகே காங்கிரசார் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் நீர்ப்பாசன துறை மந்திரியாக இருந்த ரமேஷ் ஜார்கிகோளி இளம்பெண் ஒருவருடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 2-ந்தேதி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, மந்திரி பதவியில் இருந்து ரமேஷ் ஜார்கிகோளி விலகினார்.
இதுகுறித்து சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து பெங்களூரு கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் ரமேஷ் ஜார்கிகோளி மீது கற்பழிப்பு உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு பின்பு, சிறப்பு விசாரணை குழு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின்போது, ஆபாச வீடியோவில் இருப்பது தான் இல்லை, அது போலியாக சித்தரிக்கப்பட்டது என ரமேஷ் ஜார்கிகோளி கூறி வந்த நிலையில், தொடர் விசாரணையில் போலீசாரிடம், இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோவில் இருப்பது நான் தான் என ரமேஷ் ஜார்கிகோளி ஒப்பு கொண்டு உள்ளார் என தகவல்கள் வெளிவந்தன.
எனினும், இளம்பெண்ணுக்கு அரசு வேலை வாங்கி கொடுப்பதாக தான் கூறவில்லை என்றும், அவரை கற்பழிக்கவில்லை என்றும், இளம்பெண்ணின் சம்மதத்துடன் தான் நெருக்கமாக இருந்ததாகவும் ரமேஷ் ஜார்கிகோளி போலீசாரிடம் கூறியுள்ளார் என கூறப்படுகிறது.
இது ஆபாச வீடியோ விவகார வழக்கில் திடீர் திருப்பம் ஏற்படுத்தியது. அதனுடன், ரமேஷ் ஜார்கிகோளியிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில், ஹனிடிராப் முறையில் இந்த வழக்கில் அவரை சிக்க வைத்திருப்பதும் உறுதியானது.
ஏனெனில் இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் காட்சியை தனக்கு தெரியாமல் வீடியோ எடுத்திருப்பதாக ரமேஷ் ஜார்கிகோளி போலீசாரிடம் கூறியுள்ளார். அதே நேரத்தில் இளம்பெண்ணின் நண்பர்கள் மற்றும் நரேஷ் கவுடா, ஸ்ரவன் உள்ளிட்டோர் ரமேஷ் ஜார்கிகோளியிடம் வீடியோவை வெளியிடுவோம் என மிரட்டி பல கோடி ரூபாய் பணம் வசூலித்து உள்ளனர் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த வழக்கில் பாலியல் பலாத்காரம் நடந்த போது, அதனை வீடியோ எடுத்தது யார்?, என்ன காரணத்திற்காக பையில் கேமராவை வைத்து கொண்டு அடுக்குமாடி குடியிருப்புக்குள் சென்றார்?, ஆர்.டி. நகரில் உள்ள வீட்டில் சிக்கிய ரூ.9 லட்சம் பணம் கொடுத்தது யார்?, அது எப்படி கிடைத்தது? உள்ளிட்ட கேள்விகளுக்கு இளம்பெண் பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.
2 ஆண்டுகளாக பரபரப்புடன் பேசப்பட்ட இந்த வழக்குடன் தொடர்புடைய பா.ஜ.க. எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிகோளி நேற்று புதிய குற்றச்சாட்டை தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. பெயரை குறிப்பிட்டு (எம்.எல்.ஏ. லட்சுமி ஹெப்பால்கர்), இவரால் தான் டி.கே. சிவகுமாருடனான எனது தொடர்பு பாதிக்கப்பட்டது என ரமேஷ் கூறியுள்ளார்.
இந்த வழக்கு (ஆபாச பட சி.டி. விவகாரம்) மத்திய விசாரணை முகமைகளில் ஒன்றான சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என ரமேஷ் ஜார்கிகோளி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் உள்பட 120 பேரின் இதுபோன்ற சி.டி.க்களை சிவகுமார் தயாரித்து வைத்திருக்கிறார் என்றும் ஜார்கிகோளி குற்றச்சாட்டாக கூறியுள்ளார். இதனால், சொந்த கட்சியிலேயே உள்ள பலரை தனது கட்டுக்குள் வைத்திருக்க ஆபாச பட சி,டி.க்களை தயாரித்து வைத்திருக்கிறார் என ரமேஷ் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
ஓராண்டுக்கு முன்பே சம்பவம் நடந்தபோது ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, சிவகுமார் ரூ.40 கோடி பணம் செலவிட்டு, என்னை ஹனிடிராப் முறையில் சிக்க வைத்து உள்ளார். அதற்கான சான்று என்னிடம் உள்ளது அவரது பங்கு என்ன? என விசாரிக்கும்படி மத்திய மந்திரி அமித்ஷாவிடம் பேசுவேன் என கூறினார். இந்த மிரட்டல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றும்படி கோருவேன் என்றும் அப்போது கூறினார்.
காங்கிரஸ் தலைவர் சிவகுமாரிடம் 120 பேரின் ஆபாச பட சி.டி.க்கள் உள்ளன உள்பட அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை கூறியதற்காக, பெங்களூருவில் உள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிகோளி வீடு அருகே காங்கிரஸ் தொண்டர்கள் இன்று ஒன்று திரண்டனர்.
அவர்கள் ரமேஷ் ஜார்கிகோளிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போகும்படி போலீசார் கூறினர். எனினும், தொடர்ந்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.