சித்தராமையா பிறந்த நாள் விழாவால் பா.ஜனதாவுக்கு கவலை இல்லை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி


சித்தராமையா பிறந்த நாள் விழாவால் பா.ஜனதாவுக்கு கவலை இல்லை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
x

தாவணகெரேயில் நடைபெறும் சித்தராமையா பிறந்த நாள் விழாவால் பா.ஜனதாவுக்கு எந்த கவலையும் இல்லை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கவலை இல்லை

எங்கள் கட்சியின் ஓராண்டு சாதனை மாநாடுகளை மாவட்டங்களில் நடத்த முடிவு செய்துள்ளோம். எங்கெங்கு மாநாடு நடத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் தேதி மற்றும் இடங்கள் அறிவிக்கப்படும். தாவணகெரேயில் சித்தராமையா பிறந்த நாள் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விழாவால் பா.ஜனதாவுக்கு எந்த கவலையும் இல்லை. நாங்களும் சித்தராம கடவுளை ஆராதிக்கிறோம். தினமும் பூஜை செய்கிறோம்.

கொப்பல் மாவட்டத்திற்கு இன்று செல்கிறேன். அங்கு அஞ்சனாத்திரி மாலை கோவில் தலத்தை மேம்படுத்த ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பணிகளை மேற்கொள்வது குறித்து இடங்களை நேரில் பார்வையிடுகிறேன்.

கொலையாளிகள் கைது

இந்த நிதியில் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிலுவையில் உள்ளன. அந்த பணிகள் முடிவடைந்ததும் திட்ட பணிகள் விரைவாக தொடங்கப்படும். தட்சிண கன்னடா மாவட்டத்தில் பிரவீன் நெட்டார் கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

இந்த வழக்கை தேசிய விசாரணை முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து என்.ஐ.ஏ.வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மங்களூருவில் கொலை செய்யப்பட்ட மசூத், பாசில் ஆகியோரின் வீட்டிற்கும் நேரில் சென்று ஆறுதல் கூற உள்ளேன்.

பாதுகாப்பு குறைபாடு இல்லை

கர்நாடகத்தில் இந்து அமைப்புகளின் தொண்டர்களின் போராட்டம் குறைந்துள்ளது. நாங்கள் தீவிரமான நடவடிக்கை தொடங்கி இருப்பதால் அதன் மீது அவர்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது. நமது போலீசார் கொலையாளிகளை நிச்சயம் கைது செய்வார்கள். போலீஸ் மந்திரியின் வீட்டிற்கு பாதுகாப்பு குறைபாடு இல்லை. பாதுகாப்பில் இருக்க வேண்டியவர்கள் இல்லாத காரணத்தால் போராட்டக்காரர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இந்த குறைபாட்டை சரிசெய்துள்ளோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story