ஏழைகளுக்கு வழங்கும் அரசியல் செய்யும் பா.ஜனதா
ஏழைகளுக்கு வழங்கும் அரிசியில் பா.ஜனதாவினர் அரசியல் செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
பெங்களூரு:-
கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் சந்திரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
உணவு பாதுகாப்பு
ஆட்சி அதிகாரத்தை இழந்த பிறகு பா.ஜனதா தலைவர்களின் உண்மையான சாயம் வெளுத்து வருகிறது. ஆட்சியில் இருந்தபோது கர்நாடகத்தை வளா்ச்சி பாதையில் அழைத்து செல்ல பா.ஜனதாவினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது எதிர்க்கட்சியாக உள்ள பா.ஜனதா கர்நாடகத்தின் நலனை காக்க எந்த பணியும் செய்யவில்லை.
மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய அரசு ஏழைகளுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்குகிறது. சித்தராமையா முன்பு முதல்-மந்திரியாக இருந்தபோது அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் அந்த இலவச அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்கினார்.
வேலைகள் பறிபோய்விட்டன
அப்போது தலா 7 கிலோ அரிசி வழங்கப்பட்டது. பா.ஜனதா அரசு அதை 5 கிலோவாக குறைத்துவிட்டது. தற்போது நாங்கள் 10 கிலோ அரிசி வழங்க முடிவு செய்தோம். ஆனால் மத்திய அரசு உள்நோக்கத்துடன் கூடுதல் அரிசி ஒதுக்க மறுத்துவிட்டது. அதனால் அரிசிக்கு பதிலாக பணம் கொடுக்கிறோம். உத்தரவாத திட்டங்களை ஒவ்வொன்றாக நாங்கள் அமல்படுத்தி வருகிறோம்.
ஆனால் அந்த திட்டங்களை ஒரே நேரத்தில் தொடங்கவில்லை என்று கூறி பா.ஜனதாவினர் போராட்டம் நடத்துவதாக சொல்கிறார்கள். கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா?. 9 ஆண்டுகள் ஆகியும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆண்டுக்கு 2 கோடி வேலைகளை உருவாக்குவதாக மோடி கூறினார். ஆனால் அதற்கு மாறாக இருந்த வேலைகளும் பறிபோய்விட்டன.
அரசியல் செய்கிறார்கள்
மத்திய அரசு அரிசி ஒதுக்காமல் ஏழைகளுக்கு வழங்கப்படும் அரிசியில் பா.ஜனதாவினர் அரசியல் செய்கிறார்கள். இது சரியா?. சட்டசபை தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது, நாம் சிங்கப்பூரில் இருந்து கர்நாடக அரசை கட்டுப்படுத்தலாம் என்று குமாரசாமி கருதினார். ஆனால் தேர்தல் முடிவுகளால் அவர் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார். அதனால் அதிகாரிகள் பணி இடமாற்றத்தில் முறைகேடு நடப்பதாக பொய்யான குற்றச்சாட்டை அவர் கூறுகிறார்.
இவ்வாறு சந்திரப்பா கூறினார்.