மத்திய பிரதேசம், சத்தீஷ்கரில் வெளிமாநில பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் முகாம்: ஒரு வாரம் தங்கியிருந்து பிரசாரம்
சட்டசபை தேர்தல் நடக்க உள்ள மத்தியபிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் வெளிமாநிலங்களை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் முகாமிட்டுள்ளனர். ஒரு வாரம் தங்கியிருந்து அவர்கள் பிரசாரம் செய்வார்கள்.
போபால்,
மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா, மேகாலயா ஆகிய 5 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில், மத்தியபிரதேசத்தில் ஆட்சியை தக்கவைக்க புதிய யுக்தியை பா.ஜனதா கையில் எடுத்துள்ளது. அதுதான் வெளிமாநில பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை வைத்து பிரசாரம் செய்யும் திட்டம்.
குஜராத், உத்தரபிரதேசம், பீகார், மராட்டியம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 230 பேர் 2 நாட்களுக்கு முன்பு மத்தியபிரதேச மாநில தலைநகர் போபால் போய்ச் சேர்ந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரு வாரம் பிரசாரம்
அந்த தொகுதியில் ஒரு வாரம் தங்கியிருந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னென்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக அவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
பா.ஜனதா தொண்டர்களுடனும், பொதுமக்களுடனும் கலந்து பழகி, தொகுதியின் தேவைகளை தெரிந்து கொள்ள வேண்டும், கள நிலவரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, எம்.எல்.ஏ.க்கள் அவரவர் தொகுதிக்கு சென்று தங்கள் பணியை தொடங்கி விட்டனர். நாள்தோறும் களநிலவர அறிக்கையை கட்சி மேலிடத்துக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
மத்தியபிரதேசத்துக்கு 39 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை பா.ஜனதா ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
சத்தீஷ்கர்
அண்டை மாநிலமான சத்தீஷ்கரில், இழந்த ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா இந்த வியூகத்தை பின்பற்றுகிறது. அங்கு அசாம், ஒடிசா, ஜார்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 57 எம்.எல்.ஏ.க்கள் நேற்று வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
ஒவ்வொருவருக்கும் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் கட்சியினருடனும், பொதுமக்களுடனும் நெருங்கி பழகி, கட்சியின் வெற்றிவாய்ப்பை அதிகரிக்க பாடுபடுவார்கள்.
மாநிலத்தில் பா.ஜனதாவின் கட்டமைப்புகளை வெளிமாநில பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தெரிந்து கொள்வதற்கும், அவர்களது அனுபவங்களை சத்தீஷ்கர் பா.ஜனதாவினர் பெறுவதற்கும் இது வாய்ப்பாக அமையும் என்று அம்மாநில பா.ஜனதா தலைவர் அருண் சவோ தெரிவித்தார்.
அங்கு ஏற்கனவே 21 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை பா.ஜனதா வெளியிட்டது.