பா.ஜ.க. அரசில் ஊழல்; விசாரணை கோரிய சச்சின் பைலட்டின் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நிறைவு
ஊழலுக்கு எதிரான நமது போராட்டம் தொடரும் என்று வசுந்தரா ராஜே அரசின் ஊழல் பற்றி விசாரிக்க கோரி நடந்த உண்ணாவிரத போராட்டம் நிறைவில் சச்சின் பைலட் கூறியுள்ளார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், இதற்கு முன் ஆட்சியில் இருந்தபோது, பா.ஜ.க.வை சேர்ந்த முதல்-மந்திரி வசுந்தரா ராஜே தலைமையிலான அரசில் ஊழல் நடந்தது என்றும் அதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் காங்கிரசை சேர்ந்த தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் வலியுறுத்தினார்.
இதற்கு கெலாட் அரசு செவிசாய்க்காத நிலையில், விசாரணையை வலியுறுத்தி இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என பைலட் திட்டமிட்டார்.
இதற்காக, ஜெய்ப்பூர் நகரில் இன்று காலை சமூக சீர்திருத்தவாதியான மகாத்மா ஜோதிபா புலேவின் உருவ படம் மற்றும் சிலைக்கு முதலில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின்னர், ஜெய்ப்பூரின் ஷாகீத் சமர்க் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றார். அவர், பா.ஜ.க. முதல்-மந்திரி வசுந்தரா ராஜே அரசின் ஊழல் பற்றி விசாரணை நடத்த வலியுறுத்தி நாள் முழுமைக்கும் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றார்.
இந்த நிலையில், அவரது உண்ணாவிரத போராட்டம் மாலை 4 மணியளவில் நிறைவடைந்து உள்ளது. இதுபற்றி அவர் கூறும்போது, ஊழல் குற்றச்சாட்டுகள் புதிதல்ல. இதற்கு முன்பு இரண்டு முறை நான் கடிதம் எழுதி உள்ளேன்.
ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான், நாம் வாக்குறுதி கொடுத்து விட்டு, வேறு ஒன்றை செய்து கொண்டிருக்கிறோம் என்று மக்கள் நினைக்கமாட்டார்கள் என பைலட் கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு சுக்ஜீந்தர் சிங் ரந்தவா பொறுப்புக்கு வந்து உள்ளார். இதற்கு முன்பு பொறுப்பில் இருந்தவரிடமும் இந்த ஊழல் விவகாரம் பற்றி நான் பேசி உள்ளேன். ஊழலுக்கு எதிராக நாம் பேச வேண்டும். ஊழலுக்கு எதிரான நமது போராட்டம் தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.