தாவணகெரேவை கைப்பற்றும் முனைப்பில் பா.ஜனதா-காங்கிரஸ்


தாவணகெரேவை கைப்பற்றும் முனைப்பில் பா.ஜனதா-காங்கிரஸ்
x

கர்நாடகத்தின் மான்செஸ்டர் என தாவணகெரே அழைக்கப்படுகிறது. தாவணகெரே மாவட்டத்தில் தாவணகெரே வடக்கு, தாவணகெரே தெற்கு, ஹரப்பனஹள்ளி, ஜகலூர், ஹரிஹரா, ஒன்னாளி, சென்னகிரி, மாயகொண்டா எனும் 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் 6 தொகுதிகளில் பா.ஜனதாவும், 2 ெதாகுதிகளில் காங்கிரசும் வெற்றி பெற்றன. ஜனதாதளம்(எஸ்) கட்சி அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தன.

வருகிற தேர்தலில் தாவணகெரே மாவட்டத்தில் உள்ள தொகுதிகளை கைப்பற்ற பா.ஜனதா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தாவணகெரே மாவட்டத்தை பொறுத்தவரை காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் தான் சமபலத்துடன் திகழ்கின்றன. இதனால், இங்கு இரு தேசிய கட்சிகள் இடையே தான் இருமுனை போட்டி நிலவுகிறது. தாவணகெரேயில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறுமா? காங்கிரஸ் கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் நிலவுகிறது.

தந்தை-மகன் போட்டி

தாவணகெரே தெற்கு தொகுதியில் பா.ஜனதாவின் ரவீந்திரநாத் எம்.எல்.ஏ.வாக உள்ளார். இந்த முறை பா.ஜனதா கட்சி அஜய்குமார் என்ற புதுமுகத்துக்கு அங்கு வாய்ப்பு வழங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சி, கடந்த முறை தோல்வி அடைந்த முன்னாள் மந்திரி எஸ்.எஸ்.மல்லிகார்ஜுனுக்கு மீண்டும் சீட் வழங்கி உள்ளது. ஜனதாதளம்(எஸ்) சார்பில் அமானுல்லாகான் போட்டியிடுகிறார்.

தாவணகெரே வடக்கு தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான சாமனூர் சிவசங்கரப்பா எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர் தாவணகெரே தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மல்லிகார்ஜுனின் தந்தை ஆவார். இவரும் அதே தொகுதியில் மீண்டும் களம் காண்கிறார். இதனால் தாவணகெரே தெற்கு மற்றும் வடக்கு தொகுதியில் தந்தை-மகன் போட்டியிடுகிறார்கள். தாவணகெரே வடக்கு தொகுதியில் பா.ஜனதா சார்பில் லோகிகெரே நாகராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஒன்னாளி-சென்னகிரி

ஒன்னாளி தொகுதியில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருக்கும் ரேணுகாச்சார்யா மீண்டும் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சாந்தனகவுடாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் சிவமூர்த்தி கவுடா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சென்னகிரி தொகுதியில் தற்போது பா.ஜனதா எம்.எல்.ஏ. மாடால் விருபாக்ஷப்பா உள்ளார். ஆனால் சமீபத்தில் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் லோக் அயுக்தா போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டதால் அவருக்கு பா.ஜனதா வாய்ப்பு வழங்கவில்லை. சென்னகிரி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக சிவ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளராக பசவராஜூ சிவகனகா வேட்பாரளாக களம் இறங்குகிறார். ஜனதாதளம்(எஸ்) சார்பில் யோகேஷ் களம் காண்கிறார்.

ஹரப்பனஹள்ளி-ஹரிஹரா

ஹரப்பனஹள்ளி தொகுதியில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவா் கருணாகர ரெட்டி. முன்னாள் மந்திரியான இவர், கல்யாண ராஜ்ஜிய பிரகதி கட்சியின் தலைவர் ஜனார்த்தன ரெட்டியின் தம்பி ஆவார். அவருக்கே மீண்டும் பா.ஜனதா கட்சி ஹரப்பனஹள்ளி தொகுதியில் சீட் வழங்கி உள்ளது. காங்கிரஸ் சார்பில் கோட்ரேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனதாதளம்(எஸ்) கட்சி நூர் அகமது என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது.

ஹரிஹரா தொகுதியில் தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராமப்பா. காங்கிரஸ் சார்பில் இன்னும் அங்கு வேட்பாளரை உறுதி செய்யவில்லை. ஆனாலும் உள்ளூர் தலைவர்கள் சிலர் டிக்கெட் கேட்டு வருகிறார்கள். பா.ஜனதா சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஹரீஷ் களம் காண்கிறார். ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சிவசங்கர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

மாயகொண்டா-ஜகலூர்

மாயகொண்டா தொகுதி தற்போது பா.ஜனதா வசம் உள்ளது. இங்கு காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.பசவராஜ் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. பா.ஜனதா கட்சி முன்னாள் மந்திரி பசவராஜ் நாயக்கிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது. ஆனந்தப்பா ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் களம் காண்கிறார்.

ஜகலூர் தொகுதியில் தற்போது பா.ஜனதாவை சேர்ந்த ராமசந்திரா எம்.எல்.ஏ.வாக உள்ளார். அவருக்கே பா.ஜனதா மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் தேவேந்திரப்பா ஜகலூரில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி பலமான புதுமுகத்தை தேடிவருகிறது.

தாவணகெரே மாவட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் இரு தேசிய கட்சிகளும் வரிந்து கட்டி நிற்பதால் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் வெற்றி-தோல்வி நிலவரம்

தொகுதி வெற்றி தோல்வி

ஜகலூர் ராமசந்திரா(பா.ஜ.க.) 78,948 ராஜேஷ்(காங்.) 49,727

ஹரப்பனஹள்ளி கருணாகரரெட்டி(பா.ஜ.க.) 67,603 ரவீந்திரா(காங்.) 57,956

ஹரிஹரா ராமப்பா(காங்.) 64,801 ஹரீஷ்(பா.ஜ.க.) 57,541

தாவணகெரே வடக்கு ரவீந்திரநாத்(பா.ஜ.க.) 76,540 மல்லிகார்ஜுன்(காங்.) 72,469

தாவணகெரே தெற்கு சாமனூர் சிவசங்கரப்பா(காங்.) 71,369 யஷ்வந்தராவ் ஜாதவ்(பா.ஜ.க.) 55,485

மாயகொண்டா லிங்கண்ணா(பா.ஜ.க.) 50,556 பசவராஜ்(காங்.) 44,098

சென்னகிரி மாடால் விருபாக்ஷப்பா(பா.ஜ.க.) 73,794 வத்னால் ராஜண்ணா(காங்.) 48,014

ஒன்னாளி ரேணுகாச்சார்யா(பா.ஜ.க.) 80,624 சாந்தனகவுடா(காங்.) 76,391


Next Story