தவறான இந்திய வரைபடம்.. சர்ச்சையில் சிக்கிய சசிதரூர்- கடுமையாக விமர்சித்த பாஜக


தவறான இந்திய வரைபடம்.. சர்ச்சையில் சிக்கிய சசிதரூர்- கடுமையாக விமர்சித்த பாஜக
x

Image Courtesy: PTI 

சசிதரூரின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று இருந்த இந்தியாவின் வரைபடம் தவறாக இருந்தது.

புதுடெல்லி,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் 17-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் எம்.பி சசிதரூர் இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதை தொடர்ந்து அவர் தனது தேர்தல் அறிக்கை வெளியிட்டார். சசிதரூரின் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று இருந்த இந்தியாவின் வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் சில பகுதிகள் தவிர்க்கப்பட்டு இருந்தது. தவறான இந்த வரைபடத்தை சசி தரூரின் அலுவலகம் கண்டறிந்து பின்னர் தேர்தல் அறிக்கையில் திருத்தங்களைச் செய்தது.

இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சசிதரூரின் அறிக்கையில் இந்தியாவின் வரைபடம் தவறாக இருந்ததை பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இது குறித்து பாஜக தலைவர் அமித் மாளவியா கூறுகையில், "காங்கிரஸ் கட்சியின் தலைவர் வேட்பாளர் சசி தரூர், தனது தேர்தல் அறிக்கையில் சிதைக்கப்பட்ட இந்திய வரைபடத்தை வைத்துள்ளார்.

ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையில் ஈடுபட்டுள்ள நிலையில், சசிதரூர் இந்தியாவை துண்டாடுவதில் முனைப்பாக உள்ளார். ஒருவேளை இதன் மூலம் அவர் காந்தி குடும்பத்தின் ஆதரவைக் பெற நினைக்கலாம்" என தெரிவித்துள்ளார்.


Next Story