தேர்தல் பிரசாரத்திற்காக இம்ரான்கானின் பிரசார பாடல் திருட்டு - பா.ஜ.க- காங்கிரஸ் மாறிமாறி புகார்


தேர்தல் பிரசாரத்திற்காக இம்ரான்கானின் பிரசார பாடல் திருட்டு - பா.ஜ.க- காங்கிரஸ் மாறிமாறி புகார்
x

காங்கிரஸ் பிரசார பாடல் பாகிஸ்தான் இம்ரான்கான் கட்சி, பயன்படுத்திய பாடலை திருடி உருவாக்கப்பட்டு இருப்பதாக பா.ஜனதா குற்றம் சாட்டி உள்ளது.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி, வருகிற நவம்பரில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்காக, 'ஜன ஆக்ரோஷ் யாத்ரா' எனும் யாத்திரையை இன்று (செவ்வாய்) முதல் தொடங்க உள்ளது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள பிரசார பாடல் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான்கானின் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி, பயன்படுத்திய பாடலை திருடி உருவாக்கப்பட்டு இருப்பதாக பா.ஜனதா குற்றம் சாட்டி உள்ளது.

இதுகுறித்து எம்.பி.யும், பா.ஜ.க. செயலாளருமான ராகுல் கோத்தாரி கூறும்போது, 'காங்கிரஸ் யாத்திரையில் பயன்படுத்தப்படும் 'சலோ சலோ காங்கிரஸ் கி சங் சலோ சலோ' என்ற பாடல், பாகிஸ்தானில் இம்ரான்கான் கட்சியின் 'சலோ சலோ இம்ரான் கி சாத்' என்ற பாடலை திருடி தயாரிக்கப்பட்டது என்று குற்றம் சாட்டினார். இரண்டு பாடல்களையும் அடக்கிய வீடியோவையும் அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து விமர்சனம் செய்ததால் பரபரப்பானது. ஏற்கனவே 'காங்கிரசார், பாகிஸ்தானின் ஆதரவாளர்கள், அது இப்போது மீண்டும் வெளிவந்துள்ளது. மத்திய பிரதேச காங்கிரசார் பாகிஸ்தானிடம் இருந்து பாடலை கடன் பெற்றுள்ளனர்' என்று அவர் சாடி உள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.கே. மிஷ்ரா, 'அரியானாவின் பா.ஜ.க. துணை முதல் மந்திரி துஷ்யந்த் சவுதாலாதான் பாகிஸ்தான் கட்சி பாடலை காப்பியடித்து பயன்படுத்தினார். அதுபோலத்தான் ராஜஸ்தானிலும் நடந்தது. தேர்தல் ஆதாயத்திற்காக ராணுவ வீரர்களை தியாகம் செய்தவர்கள் இப்போது ஒரு பாடலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது துரதிர்ஷ்டவசமானது" என்று கூறி உள்ளார்.


Next Story