குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஆதரவு
குடியுரிமை திருத்த சட்டம் மக்களுக்கு குடியுரிமை வழங்குமே தவிர பறிக்காது என்று பிஜு ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது
புவனேஷ்வர்,
பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதஅடக்குமுறைக்கு உள்ளாகி, அங்கிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்த சட்டத்தை கடந்த 2019- ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதால் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதன்படி, குடியுரிமை திருத்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பா.ஜ.க அல்லாத மாநிலங்களில் ஆளும் முதல் மந்திரிகள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஒடிசாவில் ஆளும் கட்சியாக உள்ள நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிஜூ ஜனதா தளம் கட்சியின் பரசுராம் தாடா கூறியதாவது:- குடியுரிமை திருத்த சட்டம் மக்களுக்கு குடியுரிமை வழங்குமே தவிர யாருடைய குடியுரிமையையும் பறிக்க போவது இல்லை. எனவே, பிஜூ ஜனதா தளம் கட்சி இந்த சட்ட திருத்தத்தை வரவேற்கிறது" என்றார்.