உத்தரபிரதேசத்தில் வினோதம்: வேண்டுதல் பலிக்காததால் சாமி சிலையை திருடியவர் கைது


உத்தரபிரதேசத்தில் வினோதம்: வேண்டுதல் பலிக்காததால் சாமி சிலையை திருடியவர் கைது
x

உத்தரபிரதேசத்தில் வேண்டுதல் பலிக்காததால் சாமி சிலையை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

கவுசாம்பி,

உத்தரபிரதேசத்தின் கவுசாம்பி மாவட்டத்தில் ஒரு சிறுகிராமத்தை சேர்ந்தவர் சோட்டு (வயது 27). இவர் ஒரு பெண்ணை விரும்பி வந்தார். ஆனால் அந்த பெண்ணை மணம் முடிக்க அவரது குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அவரிடம், தினமும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டால், சாமி உன் வேண்டுதலை நிறைவேற்றும் என்று சிலர் ஆறுதல் கூறி உள்ளனர்.

இதனால் சோட்டு, ஊரில் இருந்த சிவன் கோவிலுக்கு தினமும் சென்று வழிபாடு செய்தார். தனக்கு விருப்பமான பெண்ணை சேர்த்து வைக்கும்படி மனமுருகி வேண்டி வந்தார். அவரது பக்தி பழக்கம் குடும்பத்தினரின் மத்தியிலும் மனமாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பினார்.

ஒரு மாதத்திற்கு மேலாக தான் பிரார்த்தனை செய்து வந்தபோதும், எந்த மாற்றமும் ஏற்பட்டதாக அவருக்கு தெரியவில்லை. இதையடுத்து அவர், கோவிலுக்கு சென்று சாமி சிலையை திருடி சென்றுவிட்டார். சாமி சிலையை காணாத கிராமத்தினர், போலீசில் புகார் அளித்தனர்.

அவர்கள் சந்தேகத்தின் பேரில் சோட்டுவை பிடித்து விசாரித்தபோது, அவர் சாமி சிலையை திருடியதை ஒப்புக் கொண்டார். புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாமி சிலை மீட்கப்பட்டு கோவிலில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.


Next Story