இந்தியாவின் கொரோனா மேலாண்மை பணிக்கு பில்கேட்ஸ் பாராட்டு: மத்திய மந்திரி மாண்டவியா டுவிட்


இந்தியாவின் கொரோனா மேலாண்மை பணிக்கு பில்கேட்ஸ் பாராட்டு: மத்திய மந்திரி மாண்டவியா டுவிட்
x

இந்தியாவின் கொரோனா மேலாண்மை, தடுப்பூசி மற்றும் டிஜிட்டல் சுகாதார திட்ட தொடக்க பணிகளுக்கு பில்கேட்ஸ் பாராட்டு என மத்திய மந்திரி மாண்டவியா டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.


புதுடெல்லி,


இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர் மற்றும் அமெரிக்க தொழிலதிபரான பில்கேட்ஸ் சுற்றுப்பணம் மேற்கொண்டு உள்ளார். அவர் மராட்டியத்தின் மும்பை நகரில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகத்திற்கு நேற்று வந்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில், பொருளாதார சூழல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநருடன் பில்கேட்ஸ் விரிவான ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின்னர், நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் தெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி தெண்டுல்கர் ஆகியோரை பில்கேட்ஸ் நேரில் சந்தித்து பேசினார்.

இதனை தொடர்ந்து டெல்லியில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியாவை, பில்கேட்ஸ் இன்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் உருவாக்கப்பட்ட தேசிய பொது சுகாதார ஆய்வகத்திற்கு சென்று பில்கேட்ஸ் பார்வையிட்டார்.

இந்த ஆய்வகம், விரைவாக மற்றும் திறமையாக கொரோனா பரிசோதனைகளை செய்வது மற்றும் தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டது. தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் உதவியுடன் ஒவ்வொரு சுகாதார திட்டங்கள் மற்றும் திட்ட தொடக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த சந்திப்பு பற்றி மந்திரி மாண்டவியா வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், இந்தியாவின் கொரோனா மேலாண்மை, தடுப்பூசி மற்றும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் போன்ற டிஜிட்டல் சுகாதார திட்ட தொடக்க பணிகளுக்கு பில்கேட்ஸ் பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.

இந்தியாவின் சுகாதார முன்னுரிமைகள், பிரதம மந்திரியின் பாரதீய ஜனஆசாதி பரியோஜனா மற்றும் இ-சஞ்சீவனி எனப்படும் தொலைதூரத்தில் உள்ள நோயாளிகளுடன் தொடர்பு கொண்டு டாக்டர்கள் சிகிச்சை அளிக்கும் செயலியின் பயன்பாடு உள்ளிட்டவை பற்றி நாங்கள் விவாதித்தோம் என்றும் மத்திய மந்திரி டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.






Next Story