ரஷியாவுடனான இருதரப்பு உறவு; இந்தியாவின் முடிவை மதிக்கிறோம்: இங்கிலாந்து வெளியுறவு மந்திரி
ரஷியாவுடன் இருதரப்பு உறவு என்ற இந்தியாவின் முடிவை நாங்கள் மதிக்கிறோம் என இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லி இன்று கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி-20 மாநாடு ஓராண்டுக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி, புதுடெல்லியில் இன்றும் நாளையும் ஜி-20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் நடைபெற்று வருகிறது.
கூட்டத்தில் பங்கேற்க ஜி-20 உறுப்பினர் அல்லாத நாடுகள் உள்பட 40 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டு உள்ளனர். பலதரப்பு அமைப்புகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளன.
இதில், ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரவ், அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன், இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லி மற்றும் சீன வெளியுறவு மந்திரி குவின் கேங் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மத்தியில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் இந்தியா செலுத்தி வரும் செல்வாக்கு பற்றியும் அவர் பேச கூடும் என கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லி செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, உக்ரைன் மீது ரஷியாவின் படையெடுப்பை இங்கிலாந்து நாடால் ஏற்று கொள்ள முடியாது. ஐ.நா.வின் சாசனம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை பாதுகாக்க நாங்கள் உதவி வருகிறோம்.
நாடுகளுடனான இருதரப்பு உறவு என்பது தங்களுடைய விருப்பம் என்ற இந்தியாவின் முடிவை நாங்கள் மதிக்கிறோம் என கூறியுள்ளார். சமீபத்தில் ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான மோதல் ஏற்பட்டு, கடந்த பிப்ரவரி 24-ந்தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்து உள்ளது.
கடந்த 8-ந்தேதி, ரஷிய ராணுவம் மற்றும் கிரெம்ளின் மாளிகைக்கு எதிராக புதிய தடைகளை இங்கிலாந்து அறிவித்தது கவனிக்கத்தக்கது.
தொடர்ந்து கிளெவர்லி பேசும்போது, இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் முற்றிலும் உற்சாகம் அளிக்கிறது. அது அற்புதம் வாய்ந்த வாய்ப்புகளை கொண்டுள்ளது. நீடித்த பொருளாதார மற்றும் பசுமை சக்தியின் செயல் திட்டம் பற்றி பேசுவதற்கான ஒரு சிறந்த சந்தர்ப்பம் ஏற்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.