போலீஸ் ஸ்டேசனில் ஆயுதங்களுடன் புகுந்து கிராம மக்கள் திடீர் தாக்குதல்! 9 போலீசார் படுகாயம் - பீகாரில் பரபரப்பு சம்பவம்
கிராம மக்கள் தடி மற்றும் இரும்பு கம்பிகளுடன் போலீஸ் ஸ்டேசனில் தாக்குதல் நடத்தியதில் அதிகாரிகள் காயமடைந்தனர்.
ராஞ்சி,
பீகாரில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பிரான்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரையும் அடித்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, 40 வயதான பிரமோத் குமார் சிங் என்பவர் மது பாட்டில்களை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டார். இந்நிலையில், போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பிரமோத் குமார் சிங் காவல் நிலையத்தில் இறந்து கிடந்தார்.
போலீஸ் காவலில் இருந்த நபர் உயிரிழந்ததையடுத்து, இந்த செய்தி காட்டுத்தீயாக அப்பகுதியில் பரவியது. உடனே உள்ளூர்வாசிகள் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தினர்.அங்கிருந்த 9 போலீசாரையும் வெறித்தனமாக அடித்துள்ளனர்.
கிராம மக்கள் தடி மற்றும் இரும்பு கம்பிகளுடன் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதில் அதிகாரிகள் காயமடைந்தனர். உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்களில் இருந்து கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணிக்கு வரவழைக்கப்பட்ட பின்னரே நிலைமையை கட்டுக்குள் வந்தது.
"காயமடைந்த போலீசார் அனைவரும் கதிஹாரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது. நிலைமை முழுவதுமாக கட்டுக்குள் உள்ளது, எங்கள் குழுக்கள் அப்பகுதியில் முகாமிட்டுள்ளன.
சிங்கின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, போலீசாரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது" என்று செயல் காவல் கண்காணிப்பாளர் தயா சங்கர் சனிக்கிழமை தெரிவித்தார்.
கடந்த 2016 முதல், பீகார் மாநில அரசு மதுபானம் உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றைத் தடை செய்தது மற்றும் அதை தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கியது குறிப்பிடத்தக்கது.