பிரதமருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் கட்சியிலிருந்து நீக்கம்..!


பிரதமருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் கட்சியிலிருந்து நீக்கம்..!
x

பீகாரில் பிரதமருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பாட்னா,

மறைந்த முன்னாள் மத்திய மந்திரி ராம்விலாஸ் பாஸ்வானின் உறவினர்களால் உருவாக்கப்பட்ட ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி, அதன் மாநில பொதுச் செயலாளர் சுதிர் குமார் ஓஜாவை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. இது தொடர்பாக இன்று கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத் தலைவரும் எம்.பி.யுமான பிரின்ஸ் ராஜ், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி சுதிர் குமாரை நீக்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அமைச்சராக உள்ள ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் பசுபதி குமார் பராசுக்கு, சுதிர் குமாரின் நடவடிக்கைகள் சங்கடத்தை ஏற்படுத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுதிர் குமார் அரசியல்வாதிகள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு எதிராக தொடர்ந்து மனுக்களை தாக்கல் செய்வதன் மூலம் செய்திகளில், தொடர்ந்து வழக்கு தொடுப்பவராக அறியப்படுகிறார். சுதிர் குமார் இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பீகார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை அன்று அவர் தாக்கல் செய்த அந்த பொதுநல மனுவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், சிவில் விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் மீது பல்வேறு துறைகளில் தனியார்மயமாக்கலை அறிமுகப்படுத்தியதன் மூலமாக அரசியலமைப்புச் சட்டத்தை மீறியதாக கூறியுள்ளார்.

சுதிர் குமாரின் இந்த மனு மீதான விசாரணையை முசாபர்பூர் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் (கிழக்கு) வருகிற ஆகஸ்ட் 6-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.


Next Story