பீகார்: விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி; குடிபோதையில் உளறிய நபர் கைது
பீகார் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்ததில் குடிபோதையில் அவர் உளறியது தெரிய வந்து உள்ளது.
பாட்னா,
பீகாரில் பாட்னா நகரில் உள்ள விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என இன்று மர்ம நபர் ஒருவர் தொலைபேசி வழியே அழைத்து மிரட்டல் விடுத்து உள்ளார்.
இதனை தொடர்ந்து வெடிகுண்டு செயலிப்பு நிபுணர்கள் உடனடியாக சம்பவ பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விமான நிலைய வளாகம், வாகனம் நிறுத்துமிடம், பூந்தொட்டி வைக்கப்பட்ட இடங்களில் சென்று தீவிர சோதனை நடத்தினர்.
இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், இதில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என கூறிய தகவல் புரளி என்று தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து தொலைபேசி அழைப்பு விவரங்களை வைத்து போலீசார், வெடிகுண்டு புரளியை விடுத்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
இதில், அந்த ஆசாமி குடிபோதையில் உளறியது தெரிய வந்தது. சமஸ்திப்பூர் போலீசார் அவரை கைது செய்து, அழைத்து சென்று உள்ளனர். அவரது பெயர் சுதான்ஷூ சேகர் என்ற முகுந்த் என தெரிய வந்து உள்ளது.
அவரை, நாகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பஞ்சாப் காலனியில் வைத்து சமஸ்திப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். தொடக்க கட்ட விசாரணையில் அந்நபர், மனநலம் பாதித்த நபர் என்றும் குடிபோதையில் உளறி உள்ளார் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்டபோதும், அவர் குடிபோதையில் இருந்து உள்ளார். அவரிடம் இருந்து மொபைல் போனை போலீசார் கைப்பற்றி உள்ளனர். எனினும், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.