குஜராத் முதல்-மந்திரியாக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்பு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு


குஜராத் முதல்-மந்திரியாக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்பு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு
x

காந்திநகரில் நடக்கிற கோலாகல விழாவில் குஜராத் முதல்-மந்திரியாக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்கிறார். விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 182 இடங்களில் இதுவரை இல்லாத வகையில், அந்தக் கட்சி 156 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடர்ந்து 7-வது முறையாக அந்த மாநிலத்தை ஆளுகிற அதிகாரத்தை பா.ஜ.க.வுக்கு மக்கள் வழங்கி உள்ளனர்.

அங்கு முதல்-மந்திரியாக இருந்து வந்த பூபேந்திர படேல்தான் (வயது 60) மீண்டும் முதல்-மந்திரி பதவி ஏற்பார் என பா.ஜ.க. மேலிடம் அறிவித்தது. சட்டசபை தேர்தலில் அவர் காட்லோதியா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆமீ யாஜ்னிக்கை 1 லட்சத்து 92 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

புதிய முதல்-மந்திரி தேர்வு

குஜராத்தில் பா.ஜ.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், காந்திநகரில் உள்ள அந்தக்கட்சியின் மாநில தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க. மேலிட பார்வையாளர்களாக பா.ஜ.க. மூத்த தலைவர்களான மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அர்ஜூன் முண்டா மற்றும் கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் சட்டசபை பா.ஜ.க. தலைவராக (முதல்-மந்திரியாக) பூபேந்திர படேல் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கபட்டார். அவருக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து கூறினர்.

கவர்னருடன் சந்திப்பு

அதையடுத்து குஜராத் மாநில பா.ஜ.க. தலைவர் சி.ஆர்.பாடீல் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் பூபேந்திர படேல், அங்குள்ள கவர்னர் மாளிகைக்கு சென்றார். கவர்னர் ஆச்சாரிய தேவ்ரத்தை சந்தித்து, தான் புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து தெரிவித்து, அதற்கான கடிதத்தை வழங்கினார். புதிய அரசு அமைப்பதற்கு உரிமையும் கோரினார். அதை கவர்னர் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து புதிய முதல்-மந்திரியாக பூபேந்திர படேல் 12-ந் தேதி (இன்று) பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது.

இன்று பதவி ஏற்பு விழா

புதிய முதல்-மந்திரி பதவி ஏற்பு விழா, காந்திநகரில் அரசு புதிய தலைமைச்செயலகம் அருகே அமைந்துள்ள ஹெலிபேடு மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இன்று மதியம் 2 மணிக்கு நடக்கிற பதவி ஏற்பு விழாவில், பூபேந்திர படேலுக்கு கவர்னர் ஆச்சாரிய தேவ்ரத் பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். பூபேந்திர படேல், தொடர்ந்து 2-வது முறையாக குஜராத் மாநில முதல்-மந்திரி பதவி ஏற்கிறார். அவர் மாநிலத்தின் 18-வது முதல்-மந்திரி ஆகிறார்.

பூபேந்திர படேலுடன் மந்திரிகள் சிலரும் பதவி ஏற்பதாக காந்தி நகரில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கனு தேசாய், ராகவ்ஜி படேல், ருஷிகோஷ் படேல், ஹர்ஷ் சங்கவி, சங்கர் சவுத்ரி, பூர்னேஷ் மோடி, மணிஷா வகீல், ராமன்லால் வோரா, ராமன் பட்கர் ஆகியோர் மந்திரிசபையில் இடம் பெறுவர் என அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி பங்கேற்பு

இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.

இதையொட்டி காந்தி நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Next Story